Bible Verse
“பொல்லாத மனுஷர்மேல் பொறாமை கொள்ளாதே, அவர்களோடே இருக்கவும் விரும்பாதே” (நீதிமொழிகள் 24:1).
பொதுவாக இன்றைக்கு மனிதர்கள் மத்தியில் காணப்படும் ஒரு குணம் பொறாமை. இரட்சிக்கப்பட்டவர்கள் என்று சொல்லுபவர்களும் இந்தப் பொறாமை என்கிற குணத்திலிருந்து வெளிவர மிகக் கடினமாகக் காணப்படுவதை நாம் பார்க்கிறோம்.
இந்த உலகத்தில் பொல்லாத மக்களாய் இருந்தாலும் அவர்கள் ஐஸ்வரியவான்களாய் இருக்கலாம். மேலும் உலகத்தின் மேன்மையான காரியங்கள் அநேகம் பெற்றிருக்கலாம்.அவர்களைப் பார்க்கும்பொழுது பொறாமை ஏற்படுவது மனித இயல்பு.
ஆனால் வேதம் சொல்லுகிறது அவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே என்று. ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எவ்வளவு ஐஸ்வரியத்தைப் பெற்றிருந்தாலும் அவனில் தேவன் இல்லை என்றால் தான் பெற்றிருப்பவைகளால்அவனுக்கு என்ன பிரயோஜனம்?
அவன் மரணத்திற்குப் பின்பாக நித்தியமான ஆக்கினை என்பதை எண்ணிப்பார்க்கும்பொழுது நாம் பயப்படவேண்டியதாய் இருக்கிறது. ஆகவே அவர்களைப் பார்த்து நாம் பொறாமை கொள்வதினால் என்ன பிரயோஜனம்?
ஆனால் ஒரு கிறிஸ்தவன்அவர்களைப் பார்த்துப் பரிதாபம் கொள்கிறவனாகவே இருப்பான். அவர்களைச் சந்தித்து இரட்சியும் என்று அவர்களுக்காக ஜெபிப்பதே சரியான வழிமுறை.அவர்கள்மேல் பொறாமை கொள்ளுவது நம்முடைய வாழ்க்கையில் அது பாதிக்கின்றது. அன்புக்குப் பொறாமை இல்லை என்பதைக் குறித்தும்நாம் வேதத்தில் பார்க்கிறோம்.
மேலும் பொல்லாத மனுஷர்களோடே இருக்கவும் நாம் வாஞ்சிக்கக் கூடாது என்று வேதம் சொல்லுகிறது.தேவனுடைய பிள்ளைகளுக்குத் தேவனோடும் அவர் பிள்ளைகளோடும் இருப்பதே மகிழ்ச்சியும் இன்பமுமாய் இருக்கும்.
