
சென்னையில் தொடர் கனமழை காரணமாக ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை மூழ்கி உள்ளது.
வங்க கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் (டிச.3) நேற்று புயலாக வலுவடைந்து.
இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று, சென்னையில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டது. மணிக்கு பத்து கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து இப்புயல் நெல்லூர்- மசூலிப்பட்டிணம் இடையே கரையை கடக்க உள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது.
இதனால் முக்கிய பிரதான சாலைகள் வெள்ளதால் மூழ்கியது. அந்த வகையில் குரோம்பேட்டையில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்து உள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையின் வளாகம், நோயளிகள் தங்கியுள்ள வார்டுகள் முழுவதும் வெள்ளம் நீர் புகுந்தது. இதனால் மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானர்.

