
உச்ச நீதிமன்றம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிசிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் கூறியது அவர்களின் சொந்தக் கருத்துக்கள் என்றும், அவற்றைக் கட்சி மறுக்கிறது என்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். வக்புச் சட்டத் திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்துக கருத்துத் தெரிவித்த நிசிகாந்த் துபே, உச்ச நீதிமன்றமே சட்டத்தை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம் எனக் குறிப்பிட்டார். வக்புச் சட்டம் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வன்முறைகளுக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேபோல், குடியரசுத் தலைவருக்கு யாரும் சவால் விட முடியாது என்றும், அவரே நாட்டின் உயரிய அதிகாரம் படைத்தவர் என்றும் தினேஷ் சர்மா கூறியுள்ளார். இது குறித்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தனது எக்ஸ் தளப் பக்கத்தில், நீதித்துறை பற்றியும், தலைமை நீதிபதி பற்றியும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் கூறியுள்ளவை அவர்களின் சொந்தக் கருத்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவற்றில் கட்சிக்கு உடன்பாடு கிடையாது என்றும், அவற்றை ஆதரிக்கவில்லை என்றும், ஒட்டுமொத்தமாக அவற்றை மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜக, நீதித்துறையை எப்போதும் மதிப்பதாகவும், அதன் உத்தரவுகளையும் கருத்துரைகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்றமும் மற்ற நீதிமன்றங்களும் நம் ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அவை அரசியலமைப்பைப் பாதுகாக்கும் தூண்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும் என்று இருவருக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் ஜே.பி.நட்டா குறிப்பிட்டுள்ளார்.



