
சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புரசைவாக்கம் பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் என்ற கருப்பு தினேஷ்.. மூலக்கடையில் வாட்டர் வாஷ் வேலை செய்து வந்தார். இவர்மீது வேப்பேரி, தலைமைச் செயலக காலனி ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. நேற்று இரவு தினேஷ் புரசைவாக்கம் சண்முகராயன் தெருவில் வைத்து நண்பரான ரவுடி கார்த்தி என்பவருடன் சம்பவ இடத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த வியாசர்பாடியைச் சேர்ந்த இமான் என்ற இம்மானுவேல் மற்றும் சிலர் திடீரெனத் தினேஷை கத்தியால் வெட்டி விட்டுத் தப்பி உள்ளனர். தகவல் அறிந்து வேப்பேரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உயிருக்குப் போராடிய தினேஷ் சிகிச்சைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று காலைச் சிகிச்சை பலனின்றி தினேஷ் உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணையில், இமானின் மனைவியுடன் தினேஷ் தவறான உறவிலிருந்து வந்தது தெரிய வந்துள்ளது. பலமுறை இமான் கண்டித்த நிலையில் தவறான உறவு தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த இமானுவேல் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தினேசை கத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு வெட்டிப் படுகொலை செய்துள்ளார். மேலும் கொலை சம்பவத்தில் தொடர்புடைய தப்பிச்சென்ற 6 பேரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

