
சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் தேர்தல் அதிகாரி குற்றவாளி என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி மாதம் 30ம் தேதி நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான 36 வாக்குகளில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட, குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கருக்கு 15 வாக்குகள் கிடைத்தன. அகாலி தளத்துக்கு 1 வாக்கு கிடைத்தது.
இருப்பினும், ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்குக் கிடைத்த 8 வாக்குகள் செல்லாது எனத் தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதனால், மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் சோன்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இது பெரும் சர்ச்சையான நிலையில், தேர்தல் அதிகாரியே வாக்குச் சீட்டுகளில் பேனாவை கொண்டு எதையோ கிறுக்குவதை போன்ற வீடியோக்கள் வெளியானது. இது தொடர்பாக உச்சநிதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்ற வந்த வழக்கில், சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் தேர்தல் அதிகாரி குற்றவாளி என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


