
அமெரிக்காவுடன் நியாயமாகவும் மதிப்புடனும் நடந்துகொள்ளாவிட்டால் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பன்னாட்டுப் பாலத்தைத் திறக்கவிட மாட்டோம் என்று டொனால்டு டிரம்ப் மிரட்டியுள்ளார். அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம், கனடாவின் ஒண்டாரியோ மாகாணம் இடையே டெட்ராய்ட் ஆற்றின் மீது மிகப்பெரிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்திய மதிப்பில் 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது. கனடா அரசின் நிதியில் கட்டப்பட்ட இந்தப் பாலம் கனடாவுக்கும் மிச்சிகன் மாநிலத்துக்கும் சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் இரு நாடுகளின் வணிக, பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுரூத் சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள பதிவில், அமெரிக்கா விட்டுக்கொடுத்ததற்காக முழு இழப்பீடு வழங்கப்படும் வரை இந்தப் பாலத்தைத் திறக்கத் தான் அனுமதிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பாலத்துக்கு அருகில் டெட்ராயிட் – கனடாவை இணைக்கும் அம்பாசடர் பாலம் அமெரிக்காவின் மோரூன் குடும்பத்துக்குச் சொந்தமானது. புதிய பாலத்தைத் திறப்பதால் மோரூன் குடும்பம் சுங்கக் கட்டண வருவாயை இழக்கும் என்பதால் அதற்கு ஆதரவாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.



