
பா.ஜ., ஆதரவு தொடரும் என்ற நம்பிக்கையில் இருந்த, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அக்கட்சி தன்னை கைவிட்டதால், அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவை எதிர்த்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தர்மயுத்தம் துவக்கினார். அவருக்கு பா.ஜ., தலைவர்கள் ஆதரவு அளித்தனர். பிரதமர் கூறியதை ஏற்று, பழனிசாமி அணியுடன் இணைந்தார்; துணை முதல்வரானார்.
கடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு, அ.தி.மு.க.,வை தனது முழு கட்டப்பாட்டில் கொண்டு வர விரும்பிய பழனிசாமி, கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கினார். இதை எதிர்த்து பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றார். வழக்கு நிலுவையில் உள்ளது.
இதுவரை வந்த நீதிமன்ற தீர்ப்புகள், பழனிசாமிக்கு சாதகமாக அமைந்துள்ளன. கட்சியின் பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை, தேர்தல் கமிஷன், தன் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. கட்சி தற்போதைய நிலையில், முழுமையாக பழனிசாமி கட்டுப்பாட்டில் உள்ளது. பா.ஜ., ஆதரவு இருப்பதால், கட்சி தன் கைக்கு வரும் என்ற நம்பிக்கையில் பன்னீர்செல்வம், அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமித்தார். திருச்சியில் மாநாடுநடத்தினார்.
அடுத்த மாதம் 1ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் டில்லியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்கு பழனிசாமி அழைக்கப்பட்டார். பன்னீர்செல்வம் அழைக்கப்படவில்லை. கூட்டத்தில் பழனிசாமிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதுடன், பிரதமர் அருகிலேயே, அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.
தற்போதைய நிலையில், பா.ஜ., கூட்டணியில், பா.ஜ.,வுக்குஅடுத்தபடியாக பெரிய கட்சியாக அ.தி.மு.க., உள்ளது. நேற்று முன்தினம் நடந்த நிகழ்வுகள், பா.ஜ., பழனிசாமியை அரவணைத்து, பன்னீர்செல்வத்தை கைவிட்டதை தெளிவுபடுத்தி உள்ளது.
இது பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘பா.ஜ., தலைமையை முழுமையாக நம்பினேன். இப்படி கைவிட்டு விட்டனரே’ என, பன்னீர்செல்வம் தனக்குநெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது கட்சி இல்லாத நிலையில், பன்னீர்செல்வத்தின் அடுத்த நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுந்து உள்ளது.இது குறித்து, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது: பா.ஜ., தலைமை எங்களை கைவிட்டது பின்னடைவு தான். எனினும் நாங்கள் சோர்வடையவில்லை. நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும் என நம்புகிறோம்.
திட்டமிட்டபடி ஆக.,1ல்ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்வோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



