நாளை பாஜக பேரணி.. நீதிக்கு குரல் கொடுக்க பெண்களுக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!

Advertisements

சென்னை:

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து நாளை மதுரையிலிருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி சார்பில் நீதி கேட்பு பேரணி மேற்கொள்ள இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இந்த நீதி கேட்பு பேரணியில் பெருவாரியான அளவில் சகோதரிகள் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட சகோதரிக்கு நியாயம் கிடைக்கக் குரல் கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

குற்றவாளிகள் திமுகவினராக இருப்பதால், பெரும்பாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி, குற்றத்தை மூடி மறைக்க முயல்கிறது திமுக தரப்பு.

அண்ணா பல்கலைக்கழக மாணவிமீதான பாலியல் தாக்குதல் வழக்கிலும், கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகியுடன், கைப்பேசியில் பேசிய நபர் யார் என்ற உண்மையை முழுவதுமாக மறைக்க முயற்சிக்கிறது.

இன்னும் ஒரு படிமேல் சென்று, பாதிக்கப்பட்ட மாணவியை, பொதுவெளியிலும், மாமன்றத்திலும் அவமானப்படுத்தியும், மாணவிகுறித்த தனிப்பட்ட விவரங்களைக் கசிய விட்டு, இனி யாரும் குற்றவாளிகள்மீது புகார் கொடுக்க அச்சப்படும் அளவிற்கு மறைமுகமாக மிரட்டியும், தரம் தாழ்ந்தும் சென்று கொண்டிருக்கிறது திமுக அரசு.

திமுக அரசின் இந்தப் பெண்கள் விரோதச் செயல்பாடுகளைக் கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட வழக்கில், முழு உண்மையும் வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாஜக மகளிர் அணி சார்பில், நாளை 03.01.2025 அன்று மதுரையில் தொடங்கி, சென்னை வரை நடைபெறவிருக்கும் நீதி கேட்பு பேரணியில் பெருவாரியான அளவில் சகோதரிகள் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட நமது சகோதரிக்கு நியாயம் கிடைக்கக் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆர் வெளியானதைக் கண்டித்தும் கோவையில் தனது வீட்டு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டம் நடத்தினார்.

தொடர்ந்து தற்போது தமிழக பாஜக மகளிரணி சார்பில் நீதிப் பேரணி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழக எதிர்க்கட்சிகள் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை முன்வைத்துப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

டிசம்பர் 30 ஆம் தேதி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

இதற்குக் கண்டனம் தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அண்ணா பல்கலைக்கழக வளாகப் பாலியல் வன்கொடுமை வழக்கில் அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்! இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த ‘சார்’ யார்?” என்று கேள்வி எழுப்பினார்.

டிசம்பர் 31 ஆம் தேதி நாம் தமிழர் கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடத்த முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டனர். இன்று பாமக சார்பில் சௌமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடத்த முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *