INDIA Alliance: பஜகாவை பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது… முதல்வர் பேச்சி !

Advertisements

இ.ந்.தி.யா என்ற பெயரே பாரதிய ஜனதா கட்சிக்குப் பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது. அதனால்தான், நம் கூட்டணியைக் கொச்சைப் படுத்திப் பேசுவதையே பா.ஜ.க.வினர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.என்று மும்பையில் நடைபெற்ற இ.ந்.தி.யா கூட்டணியின்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்…

இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாகத் தங்களை தயார்படுத்தி வருகின்றன. ஆளும் பா.ஜ.க. தலமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள் இந்தியா (I.N.D.I.A.) எனும் பெயரில் ஒரு பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளன.

இக்கூட்டணியின் முதல் சந்திப்புக் கூட்டம் கடந்த ஜூன் 23 அன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இரண்டாவது சந்திப்புக் கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் இக்கூட்டணியின் அடுத்த சந்திப்பு மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தற்போது நடந்து வருகிறது.

இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்னா, பெங்களூரு ஆகிய இரண்டு இடங்களைத் தொடர்ந்து, மூன்றாவது கூட்டமாக மும்பையில் இந்தக் கூட்டத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய் திருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்தியாவைக் காக்கப் போகும் இந்த இந்தியா கூட்டணியானது கடந்த 3 மாதங்களாக மிகுந்த ஒற்றுமையுடனும் கட்டுக் கோப்புடனும் செயல்பட்டு வருகிறது.

நமது கூட்டணியின் பலத்தைவிட, ‘இந்தியா’ என்ற பெயரே பாரதிய ஜனதா கட்சிக்குப் பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது. அதனால்தான், நம் கூட்டணியைக் கொச்சைப் படுத்திப் பேசுவதையே பா.ஜ.க.வினர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் ஒன்று சேரமாட்டார்கள், ஒரே கூட்டத்தில் பிரிந்து விடுவார்கள் எனப் பா.ஜ.க. நினைத்தது. ஆனால், கூட்டணியாக இணைந்து-அதற்குப் பெயரும் சூட்டி மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தை நடத்திவிட்டோம் என்பது நம்முடைய உறுதியைக் காட்டுகிறது.

வெற்றிப் பாதையில் நாம் பயணித்து வருகிறோம் என்பதன் அடையாளம் இது. பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தி மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளின் அரசை ஒன்றியத்தில் அமைப்பதே நமது அணியின் முழுமுதல் நோக்கமாகும். பா.ஜ.க.வைத் தனிமைப்படுத்தும் வகையில் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை முடிந்த வரை இந்த அணியில் சேர்த்தாக வேண்டும்.

இதனை மனதில் வைத்து அனைத்துத் தலைவர்களும் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நமது கூட்டணி, இந்தியா முழுமைக்குமான கூட்டணி என்பதால் இதற்கு ஒருங்கிணைப்புக் குழுவையும் குறைந்தபட்ச செயல் திட்டத்தையும் உடனடியாக உருவாக்க வேண்டும். இந்தியா கூட்டணியின் முகமாக அந்த அறிக்கைதான் அமையும். நமது நாட்டைப் பா.ஜ.க ஆட்சி பல்வேறு வகைகளில் சீரழித்துள்ளது.

அதனை எப்படிச் சரிசெய்யப் போகிறோம் என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்வதற்கான அறிக்கையாக அது அமைய வேண்டும். ஒரு கட்சி ஆட்சி முடிந்து இன்னொரு கட்சியின் ஆட்சி என்பதாக இல்லாமல், எதேச்சதிகார ஆட்சி முடிந்து, மக்களாட்சி மலரத் தேவையான கொள்கையின் மூலமாக மக்களிடையே நாம் நம்மை அடையாளப்படுத்த வேண்டும்.

நம்முடைய கூட்டணிக்கு இத்தகைய கொள்கைகள் தலைமை தாங்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன்பு, நிச்சயமாகப் பா.ஜ.க. தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கூட்டணி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவும் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கான ஒளிமயமான ஆண்டாக அமையவும் இப்போதே எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *