சொன்னதை செய்த அண்ணாமலை… பரபர கோவை!

Advertisements

கோவை:

திமுக அரசைக் கண்டித்து, கோவையில் உள்ள தன்னுடைய இல்லத்தின் முன்பு, தனக்குதானே சாட்டையால் அடித்துக் கொண்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. பச்சை வேட்டி அணிந்து, சட்டை இல்லாமல், 8 முறை சாட்டையால் தன்னை தானே அடித்துக் கொண்டார். நேற்றைய தினம் சொன்னதை போலவே, இன்று கவனம் ஈர்ப்பு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்.

கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது மிக நீண்ட பேட்டி ஒன்றை தந்திருந்தார்… அப்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம்குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்த அண்ணாமலை, திமுக அரசைக் கடுமையாகக் குற்றஞ்சாட்டி பேசியிருந்தார்.

பிரச்சனைகள்:

தொடர்ந்து அண்ணாமலை பேசும்போது, “தமிழக அரசியலில் மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதில்லை. காறித்துப்புவது போல இருக்கிறது தமிழக அரசியல். எனவேதான், இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளோம். இந்த அரசியலாகாது., சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற முன்னாள் ஆளுநரைக் காவல் துறை கைது செய்துள்ளனர். இன்னும் எத்தனை முறை பாஜகவினரை கைது செய்வீர்கள். எங்களது வீட்டுக்குச் சாலை வசதி செய்து கொடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோமா?

எங்கள் வீட்டுக்குச் சிறுவாணி தண்ணீர் வரவில்லை என்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறோமா? எனவே இனி ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் இல்லை. இனிமேல் வேறு மாதிரிதான் டீல் செய்யப் போகிறோம். நாளையிலிருந்து ஒவ்வொரு வீட்டுக்கும் வெளியே இருந்தும் ஆர்ப்பாட்டம் நடக்கும். நாளை எனக்கு நானே சாட்டையடி கொடுக்கக்கூடிய நிகழ்வைக் காலை 10 மணிக்கு எனது வீட்டுக்கு வெளியே நடத்தப் போகிறேன்.

6 முறை சாட்டையடி:

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து 6 முறை சாட்டையால் அடித்துப் போராட்டம் நடத்துவேன், திமுக ஆட்சியை அகற்றும் வரை நான் செருப்புகள் அணிய மாட்டேன். நாளை முதல் 48 நாட்களுக்கு நான் விரதம் இருந்து அறுபடை முருகன் கோவில்களுக்குச் சென்று, முருகப்பெருமானிடம் முறையிடப்போகிறேன் என்றெல்லாம் ஆவேசத்துடன் பேசியிருந்தார்.

இதையடுத்து, தன்னுடைய காலாணியை அவரே கைகளில் எடுத்துச் சென்று காரில் வைத்தார். இன்று காலை 10 மணியளவில் கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள அண்ணாமலையின் இல்லத்தின் முன்பாகச் சாட்டை அடித்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெற உள்ளதாகவும், இதற்காகக் கோயில் திருவிழாக்களில் பூசாரிகள் அடித்துக் கொள்ளும் புதிய சாட்டை ஒன்றும் வாங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவின.

முழக்கம்:

இந்நிலையில், அண்ணாமலை சொன்னதைப் போலவே 8 முறை சாட்டையால் தன்னைத்தானே அடித்து அண்ணாமலை ‘கவன ஈர்ப்பு’ போராட்டம் நடத்தினார்… இன்று காலை 10 மணிக்குக் கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பு மேல் சட்டை அணியாமல் பச்சை வேட்டி அணிந்து 8 முறை தேங்காய் நாரால் பின்னப்பட்ட சாட்டையை வைத்து அடித்துக் கொண்டார். அண்ணாமலை சாட்டையால் அடிக்கும்போது அங்குக் கூடியிருந்த பாஜக தொண்டர்கள் வெற்றிவேல்… வீரவேல் என முழக்கமிட்டனர். 8வது முறை சாட்டையால் அடித்துக் கொள்ள போகும்போது, அங்கிருந்தவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

பேட்டி:

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘முருகப்பெருமானிடம் வேண்டி 6 சாட்டை அடிகளையும் சமர்ப்பிக்க உள்ளோம். இன்றிலிருந்து விரதமும் மேற்கொள்ளப் போகிறோம். காலணியை நேற்றே கழட்டி வைத்துவிட்டேன்… திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும்வரை காலணி அணியமாட்டேன்.

உடலை வருத்திக் ஒன்றை செய்யும்போது, அதற்கான பலன் கிடைக்கும் என்பதால்தான், இந்தச் சாட்டையடி போராட்டம் நடத்தப்பட்டது. சமுதாயத்தில் ஏற்படக்கூடிய அவரங்களுக்கு எதிராக இப்படி நான் சாட்டையில் அடித்துக் கொண்டேன். நாங்கள் அறவழியில் செல்கிறோம். இது தனி மனித வெறுப்புக்காக இல்லை. ஆண்டவருக்காகச் சமர்ப்பித்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *