
பாஜக அரசுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர்கள் என்றால் வெறுப்பு என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வுகள் குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுப் புறக்கணித்துவதாகவும், தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக்கூடிய மத்திய பா.ஜ.க. அரசு, கீழடி அகழாய்வுகளில் வெளிப்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும், புதைக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைக் காக்கவும், அதை நிறுவவும் வேண்டிய பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழுணர்வுகொண்ட அதன் தோழமை சக்திகளுக்கும் மட்டுமே இருப்பதால்தான், கிளம்பிற்று காண் தமிழர் கூட்டம் என்கிற வகையில் கழக மாணவரணி மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி, கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.
ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திய அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் என்றும், கீழடியிலும் சென்னையிலும் ஒலித்திருப்பது முதல் கட்ட முழக்கம் என்றும், இது டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும் எனவும், தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை கழகத்தின் போராட்டம் ஓயவே ஓயாது என்று, முதலமைச்சர் கூறியுள்ளார்.


