
Bangladesh Hindus : வங்கதேசத்தில் தொடரும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து, ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் போராட்டம்!
வங்கதேச மாணவ அமைப்பினர் போராட்டம் எதிரொலியாக ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்ததன் காரணமாக அங்கு வசிக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது.
இது அவர்கள் இடையே பயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், வெளிநாடுகளும் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து அந்நாட்டு இடைக்கால அரசு, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தது. ஆனால், தாக்குதல் சம்பவங்கள் நிற்கவில்லை. அதேநேரத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பூஜை நடக்கும் இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்தன.
தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து டாக்காவில் நூற்றுக்கணக்கான ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். தங்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை இயற்றவும், இடைக்கால அரசில் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



