புதுடில்லி:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.
2001 – 2006ல் அ.தி.மு.க., ஆட்சியின்போது, வருவாய்த் துறை அமைச்சராகப் பதவி வகித்த ஓ.பி.எஸ்., வருமானத்திற்கு அதிகமாக ரூ.1,77 கோடி சொத்து சேர்த்ததாக, தி.மு.க., ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், ஓ.பி.எஸ்., மனைவி விஜயலட்சுமி, மகனும், முன்னாள் எம்.பி., யுமான ரவீந்திரநாத் குமார் உள்பட அவரது உறவினர்கள்மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
பல ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சியமைந்தபோது, வழக்கைத் திரும்பப்பெற்றுக் கொள்வதாகத் தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, கடந்த 2012ம் ஆண்டு, போதிய ஆதாரங்கள் இல்லையெனக் கூறி, ஓ.பிஎஸ்., உள்ளிட்ட அனைவரையும் இந்த வழக்கிலிருந்து விடுவித்து, சிவகங்கை கோர்ட் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சிவகங்கை கோர்ட் அளித்த தீர்ப்பை ரத்து செய்தார். மேலும், இது தொடர்பான வழக்கை மதுரை சிறப்பு கோர்ட்டில் நடத்த வேண்டும் என்றும் ஆணையிட்டார். இதையடுத்து, தன் மீதான சொத்து குவிப்பு வழக்கை மறுவிசாரணை செய்யத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஓ.பி.எஸ்., தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட், ஓ.பி.எஸ்., க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை மறு விசாரணை செய்ய இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ‘சிறப்பு நீதிமன்றத்தின் அதிகாரத்தைச் சென்னை ஐகோர்ட் எடுத்துக் கொண்டு, குற்றச்சாட்டுப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. ஓ.பி.எஸ்., மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும்’ என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.