பிபின்ராவத் 3-ம் ஆண்டு நினைவு தினம்!

Advertisements

ஊட்டி:

இந்திய ராணுவ முப்படைத்தளபதியாக இருந்த பிபின்ராவத் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி கோவை சூலூர் விமானப்படைத்தளத்திலிருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார்.

அப்போது குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் மோசமான வானிலை மற்றும் மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின்ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளான பகுதியில் வெலிங்டன் ராணுவ மையம் சார்பில் கடந்த 2023-ம்ஆண்டு நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. இதில் பிபின்ராவத் உள்ளிட்ட உயிரிழந்த 14 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் அந்த நினைவுத்தூணில் ஆன்மா அழியாதது, அதனை எந்த ஆயுதத்தாலும் துளைக்க முடியாது, எந்த நெருப்பாலும் அழிக்க முடியாது. தண்ணீராலும் ஈரப்படுத்த முடியாது, காற்றாலும் உலரப்படுத்த முடியாது என்ற பகவத்கீதையின் வாசகங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பிபின்ராவத் உள்ளிட்டோரின் 3-வது ஆண்டு நினைவுத் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ராணுவத்தினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்போது குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி கமான்டண்ட் வீரேந்திரவாட்ஸ் பிபின்ராவத் உள்ளிட்டோரின் புகைப்படங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த புகைப்படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நஞ்சப்பசத்திரம் பகுதி மக்களும் திரண்டு வந்து ஹெலிகாப்டர் விபத்தில் பலியான வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *