
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது பொய் என்றும், இங்கு ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யவே அவர் வெளிநாடுகளுக்குச் செல்வதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்னும் பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மதுரையில் பரப்புரை செய்த அவர், வெளிநாடுகளில் இருந்து முதலீட்டை ஈர்த்துக் கொண்டுவருவதற்காக ஸ்டாலின் செல்லவில்லை என்றும், தமிழ்நாட்டில் கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காகவே அவர் வெளிநாட்டுக்குச் செல்வதாகவும் தெரிவித்தார்.
ஜெர்மனியில் இப்போது செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாடுகள் எல்லாம் ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதன் விரிவாக்கத் திட்டங்களே என்றும் பழனிச்சாமி தெரிவித்தார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கொடுங்குற்றங்கள் நிகழாத ஒருநாள் கூட இல்லை என்றும், பெண்கள் குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டம், விற்பனை, பயன்பாடு எல்லாம் அதிகரித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதற்கு மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற சொத்துவரி ஊழலே சிறந்த எடுத்துக் காட்டு என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


