Atal Setu Not A Picnic Spot: போலீஸ் எச்சரிக்கை!

Advertisements

பாலத்தில் செல்லும் மக்கள், வாகனங்களை நிறுத்திப் புகைப்படம், வீடியோ மற்றும் செல்பி எடுத்தவண்ணம் உள்ளனர்.

மும்பை: மும்பை-நவி மும்பை இடையே அமைக்கப்பட்டுள்ள அடல் சேது பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் மொத்த நீளம் 21.8 கிலோ மீட்டர். இதில் சுமார் 16.5 கிலோ மீட்டர் தூரம் கடலில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் மிக நீண்ட பாலம் மற்றும் மிக நீண்ட கடல் பாலம் என்ற பெருமைகளைப் பெற்றுள்ளது.

இந்தப் பாலத்தின் மூலம் மும்பையிலிருந்து நவி மும்பைக்கு செல்லும் நேரம் ஒன்றரை மணி நேரத்திலிருந்து வெறும் 20 நிமிடங்களாகக் குறைகிறது. இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் மெதுவாகச் செல்லும் வாகனங்களுக்குப் பாலத்தில் செல்ல அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப் பிரமாண்டமாகக் காட்சியளிக்கும் இந்தப் பாலம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அந்தப் பாலத்தில் செல்லும் மக்கள், வாகனங்களை நிறுத்திப் புகைப்படம், வீடியோ மற்றும் செல்பி எடுத்தவண்ணம் உள்ளனர். இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. பொதுமக்களின் பிக்னிக் ஸ்பாட் ஆக மாறத் தொடங்கியதால் பாலத்தில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து வாகன ஓட்டிகளுக்கு மும்பை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

“அடல் சேது பாலம் நிச்சயமாகப் பார்த்து ரசிக்கும் அளவிற்கு மதிப்புமிக்கது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் வாகனங்களைப் பாலத்தில் நிறுத்துவதும், புகைப்படங்கள் எடுப்பதும் சட்டவிரோதமானது. பாலத்தில் வாகனங்களை நிறுத்தினால், வழக்குப் பதிவு செய்யப்படும்” எனப் போக்குவரத்து காவல்துறை தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளது.

‘21.8 கிமீ நீளமுள்ள அடல் சேது பாலம் பிக்னிக் ஸ்பாட் அல்ல’ என்று அந்தப் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *