கராச்சியில் உள்ள ஒராங்கி நகரப் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மௌலானா ரஹீமுல்லா தாரிக் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதியும், தேடப்படும் குற்றவாளியான மசூத் அசாரின் நெருங்கிய நண்பர் மௌலானா ரஹீமுல்லா தாரிக் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். இவர் கராச்சியில் உள்ள ஒராங்கி நகரப் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தாரிக் ஒரு மதக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றபோது, அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம கும்பல் அவரை சுட்டுக் கொன்றுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் மூத்த தளபதி அக்ரம் கான் காசி சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்குள் தாரிக் கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவாவின் பஜவுர் மாவட்டத்தில் பைக்கில் வந்த மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்களால் பயங்கரவாதிகள் மர்மமான முறையில் கொல்லப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குள் பல்வேறு குழுக்களாக ஊடுருவிய பயங்கரவாதிகளை தீவிரவாதிகளாக மாற்றியமைக்கும் பொறுப்பை காசி வகித்து வந்ததாகவும், லஷ்கர் இ தொய்பா குழுவுக்கு ஆட்சேர்ப்பு செய்பவராகவும் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் தாங்ரி பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அபு காசிம் என்கிற ரியாஸ் அகமது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மசூதிக்குள் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதேபோல் ராவல்பிண்டியில் மற்றொரு சம்பவம் அரங்கேறியது. இதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் இம்தியாஸ் ஆலம் என்று அழைக்கப்படும் பஷீர் அகமது பீர் படுகொலை செய்யப்பட்டார். இந்த மர்மமான கொலைகளுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.