Assam Assembly:முஸ்லிம் திருமணம், விவாகரத்தை கட்டாய பதிவு செய்யும் மசோதா நிறைவேற்றம் !

Advertisements

முஸ்லிம் திருமணம், விவாகரத்து ஆகியவற்றை கட்டாய அரசு பதிவு செய்வதற்கான மசோதா அசாம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

திஸ்பூர்:அசாம் மாநில சட்டசபையில் இன்று, முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துகளுக்கான கட்டாயப் பதிவு மசோதா 2024-ஐ, மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மந்திரி ஜோகன் மோகன் தாக்கல் செய்தார்.

முன்னதாக, முஸ்லிம் திருமணங்கள் காஜிக்களால் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில், இனி அனைத்து சமூக மக்களின் திருமணங்களும் அரசிடம் பதிவு செய்யப்படுவதை இந்த புதிய மசோதா உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா, “காஜிக்களால் நடத்தப்பட்ட திருமணங்களின் முந்தைய பதிவுகள் அனைத்தும் செல்லுபடியாகும். புதிய பதிவுகள் மட்டுமே சட்டத்தின் வரம்பிற்குள் வரும்.

முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் இஸ்லாமிய சடங்குகளால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் நாங்கள் தலையிடவில்லை. இஸ்லாம் தடைசெய்த திருமணங்கள் பதிவு செய்யப்படாது என்பதுதான் எங்களின் ஒரே நிபந்தனை. இந்த புதிய சட்டத்தின் மூலம் குழந்தை திருமணத்தை பதிவு செய்வது முற்றிலும் தடை செய்யப்படும்” என்று கூறினார்.

இந்த மசோதாவிற்கான பொருள் மற்றும் காரணம் குறித்த அறிக்கையில், கட்டாய திருமணங்கள் மற்றும் குழந்தை திருமணங்களை தடுப்பதற்காக இந்த மசோதா முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதோடு, பலதார மணத்தை தடுக்கவும், கணவரை இழந்த பெண்கள் தங்களின் வாரிசு உரிமைகள் மற்றும் பிற சலுகைகளை பெறவும் இந்த மசோதா வழிவகை செய்யும் என ஜோகன் மோகன் தெரிவித்தார். மேலும் இந்த மசோதா, திருமணத்திற்குப் பிறகு ஆண்கள் தங்கள் மனைவியை கைவிடுவதை தடுக்கும் என்றும், திருமண உறவை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *