எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் சற்று அதிகரித்துள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் இயங்கும் அதி விரைவு ரயில்களின் வேகம் அதிகரித்துள்ளதாகவும் சரக்கு ரெயில்களின் வேகத்தில் எந்த மாற்றமும் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வகையான பயணிகள் மற்றும் சரக்கு ரெயில்களின் சராசரி வேகம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. சிவதாசன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து கூறிய மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதில் அவர் “2019-20-ம் ஆண்டில் சரக்கு ரெயில்களின் சராசரி வேகம் மணிக்கு 23.6 கிமீ ஆகும். இப்போது வரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. பயணிகள் ரெயிலில், எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் 2019-20-ல் மணிக்கு 50.6 கி.மீ ஆக இருந்தது.
அதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு 2023-24-ல் (நவம்பர் வரை) மணிக்கு 51.1 கிமீ வேகமாக உள்ளது. அதே போல் சாதாரண ரெயில்களும் 2019-20-ல் மணிக்கு 33.5 கிமீ வேகத்தில் இருந்து 2023-24-ல் 35.1 ஆக சிறிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளன.” என்று தெரிவித்தார்.

