Arvind Kejriwal:இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Advertisements

சுப்ரீம் கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

புதுடெல்லி:டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேவேளை, டெல்லி மதுபான கொள்ளையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி கீழமை நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து வந்தார். இதில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 12ம் தேதி ஜாமீன் வழங்கியது. ஆனாலும், சிபிஐ பதிவு செய்த வழக்கில் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து, சிபிஐ வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த மாதம் 14ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்ததோடு, கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்கும்படி சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

இந்நிலையில், இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், சமூதாயத்திற்கு கெஜ்ரிவால் அச்சுறுத்தலாக இல்லை. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் கைதான மணிஷ் சிசோடியா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதேபோல சஞ்சய் சிங், விஜய் நாயர், கே.கவிதா ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் கெஜ்ரிவால் மட்டுமே இன்றும் ஜாமீன் பெற முடியாமல் சிறையில் இருக்கிறார் என்றார்.

இதையடுத்து வாதிட்ட சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிதா, மணிஷ் சிசோடியா ஆகியோர் விசாரணை நீதிமன்றம், ஐகோர்ட்டு ஆகியவற்றை அணுகிய பிறகே சுப்ரீம் கோர்ட்டு வந்தனர் என சிபிஐ தரப்பு வாதிட்டது. வழக்கு தொடர்பாக வாதாடுங்கள். ஜாமீன் கோரி எந்த கோர்ட்டை முதலில் அணுக வேண்டும் என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு தாக்கல் செய்யப்பட்ட விதத்தையே நாங்கள் எதிர்க்கிறோம். சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றால், அதன் பிறகு வாதிட ஒன்றும் இல்லை என சிபிஐ தரப்பு வாதிட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *