
அருணாசலப் பிரதேசத்தின் இடாநகரில் மின்சாரம், போக்குவரத்து, நலவாழ்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 1290 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
அருணாசலப் பிரதேசத் தலைநகர் இடாநகரில் வரி செலுத்தும் வணிகர்கள், தொழில்முனைவோர் ஆகியோரிடம் வரிச் சீரமைப்புக் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
சுதேசியாய் இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்று எழுதப்பட்ட பதாகைகளை வணிகர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.அருணாசலப் பிரதேசத்தில் 426 மெகாவாட் மின்னுற்பத்தித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இதேபோல் போக்குவரத்து, நலவாழ்வு, மகளிர் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மொத்தம் 1290 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அருணாசலப் பிரதேசம் வீரத்தின் விளைநிலம் என்று குறிப்பிட்டார். இந்த மாநிலத்தில் மின்சாரம், நலவாழ்வு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.
முன்பிருந்த காங்கிரஸ் அரசு அருணாசலப் பிரதேசத்தையும், அதன் மக்களையும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்ததாகவும், இதனால் வடகிழக்கு மண்டலமே வளர்ச்சியில் பின்தங்கி இருந்ததாகவும் தெரிவித்தார்.
வடகிழக்கில் உள்ள எட்டு மாநிலங்களையும் அஷ்டலட்சுமிகளாகத் தாங்கள் கருதுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். உள்நாட்டுப் பொருட்களையே விற்போம் என்று கடைக்காரர்களும், உள்நாட்டுப் பொருட்களையே வாங்குவோம் என்று மக்களும் உறுதியேற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.முன்னதாக இடா நகரில் ரோடு ஷோவில் பொதுமக்களின் வாழ்த்துக்களைப் பெற்ற பிரதமர் அவர்களுக்குக் கையசைத்து நன்றி தெரிவித்தார்.


