தமிழக முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் மக்கள் சேவையை நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுவதாகத் தெரிவித்துள்ளார். தமிழ் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றால் நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டி, மாநில சுயாட்சிக்கு வித்திட்டவர் பேரறிஞர் அண்ணா என்று புகழாரம் சூட்டியுள்ளார். கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு என்ற அவரது உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, தமிழின் பெருமையைக் காத்திட இந்நாளில் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத் தளப் பதிவில், தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் – சமூகநீதியில் – மாநில உரிமையில் – தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைத் தளப் பதிவில், தமிழக மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை விதைத்து, சமூகநீதி, சமத்துவம், என திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் அண்ணா என்று குறிப்பிட்டுள்ளார். பேரறிஞர் அண்ணாவின், அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்குவதாகத் தெரிவித்துள்ளார். தனிமனிதப் புகழை விட சமூகத்தின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்திய அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம் என்று தெரிவித்துள்ளார்.



