திருச்செந்தூர்த் தொகுதியில் 2001ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அனிதா இராதாகிருஷ்ணன் உதயநிதி பிறந்த நாள் விழாவைப் புறக்கணித்துள்ள நிலையில், தவெகவின் காந்தச் சக்தியில் அவர் இழுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அது பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்..
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஆறு பொதுத்தேர்தல் ஓர் இடைத்தேர்தல் என 2021ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வென்று இன்றுவரை சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அனிதா இராதாகிருஷ்ணன். திருச்செந்தூருக்கு மேற்கே உடன்குடிக்கு வடக்கே உள்ள தண்டுப்பத்து என்னும் ஊரைச் சேர்ந்த அனிதா இராதாகிருஷ்ணன் இளமையில் கல்வி பயின்றது உடன்குடி கிறிஸ்தியாநகரம் TDTA மேல்நிலைப் பள்ளியில்.
மதுரையில் அனிதா மெட்டல்ஸ் பாத்திரக்கடையில் வேலைபார்த்துத் தன் திறமையால் பின்னர் அந்தப் பாத்திரக்கடைக்கே உரிமையாளரானவர் அனிதா இராதாகிருஷ்ணன். 1999ஆம் ஆண்டு பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் தினகரன். அந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்குக் குடம், குத்துவிளக்கு எனப் பரிசுப்பொருட்கள் கொடுப்பதற்குப் பெருமளவில் அனிதா இராதாகிருஷ்ணனின் பாத்திரக் கடையில் கொள்முதல் செய்துள்ளனர்.
இந்தப் பழக்கத்தின் காரணமாக 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அனிதா இராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற அனிதா இராதாகிருஷ்ணன் வீட்டுவசதித் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இந்தக் காலத்தில் ஆண்டுதோறும் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டித் திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பனப் பல ஊர்களிலும் ஆண்பெண் இருபாலர்க்கும் தேசிய அளவிலான கபடிப் போட்டிகளை நடத்திப் பெருந்தொகையைப் பரிசாகவும் அளித்துப் புகழ்பெற்றார்.
அதேநேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் மணிநாடார் மறைவுக்குப் பின் சாத்தான்குளம் தொகுதிக்கு 2003ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் சாதாரணத் தொண்டரான நீலமேகவர்ணத்தைப் போட்டியிடச் செய்து வெங்கடேச பண்ணையாரின் உதவியுடன் அவரை வெற்றிபெறச் செய்ததில் அனிதா இராதாகிருஷ்ணனின் பங்கு பெரிதாகும். காங்கிரஸ் கோட்டையான சாத்தான்குளம் அதிமுகவின் வசம் வந்ததில் ஜெயலலிதா அகமகிழ்ந்தார்..
அந்தத் தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் சாத்தான்குளத்தைத் தேவன்குளம் ஆக்குவோம் என்று உறுதியளித்து அங்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியைத் தொடங்கினார்.இக்காலத்தில் சாத்தான்குளம் தொகுதியில் தாமிரபரணிக் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன.. இதேபோலத் திமுகவின் கோட்டை என்றழைக்கப்பட்ட சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் 2002ஆம் ஆண்டு இடைத்தேர்தல் வந்தது. அப்போது வெங்கடேச பண்ணையார் உதவியுடன் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து ஆட்களைக் கொண்டுவந்து களப்பணியாற்றி அதிமுக வேட்பாளர் இராதாரவியை வெற்றிபெறச் செய்ததிலும் அனிதா இராதாகிருஷ்ணனுக்குப் பெரும் பங்கிருந்தது.
இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்குக் காரணமான அனிதா இராதாகிருஷ்ணனின் மீது ஜெயலலிதாவுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டது. அவரை அதிமுகவின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக்கினார். 2006ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தாலும் திருச்செந்தூரில் அனிதா இராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றிருந்தார். மதுரையில் அனிதா மெட்டல்ஸ் என்ற பெயரில் பாத்திரக்கடை நடத்திய அனிதா இராதாகிருஷ்ணன் அப்போது மதுரையில் குடியிருந்துகொண்டு திமுகவில் தென்மண்டலப் பொறுப்பாளராகவும், மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய இரசாயனத்துறை அமைச்சராகவும் இருந்த மு.க.அழகிரியுடன் மோதலை விரும்பாமல் இணங்கிப் போக வேண்டி இருந்தது.
இதனால் அதிமுகவில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலும் இருந்து விலகினார். கருணாநிதியின் முன்னிலையில் திமுகவில் இணைந்ததுடன், 2009ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பிறகு 2011, 2016, 2021, 2026 எனத் தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்டு அவரே வெற்றிபெற்றுள்ளார். இதில் 2021 முதல் 2026 வரையான காலக்கட்டத்தில் திமுக ஆட்சியில் அவர் மீன்வளம், கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சராக இருந்தார். திமுகவில் தூத்துக்குடித் தெற்கு மாவட்டச் செயலாளராகத் தொடர்ந்து இருந்து வருகிறார்.
திமுகவில் தென்மண்டல அமைப்புச் செயலாளராக அழகிரி இருந்த காலத்தில் அங்கு வந்த ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதில் அனிதா இராதாகிருஷ்ணன் பெரும்பங்கு வகித்தார். இதற்காக அனிதா இராதாகிருஷ்ணனுக்குத் தங்கச் சங்கிலி அணிவித்து அழகிரி பாராட்டியதும் உண்டு. முதலில் பாத்திரக்கடை வைத்திருந்த அனிதா இராதாகிருஷ்ணன் பின்னர் மணல் குவாரி, கல்குவாரி என்று தனது தொழிலை விரிவுபடுத்திக்கொண்டே போனார். இதனால் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளுக்கே உரிய மிதமிஞ்சிய செல்வம் கொழித்துக் கிடக்கிறது அவரிடம்.
தொகுதி மக்கள் குடிநீர், சாலை வசதி, குளம் தூர்வாருதல் என எந்தக் கோரிக்கையைக் கொண்டுவந்தாலும் முதலில் தன் சொந்தச் செல்வாக்கில் அதை நிறைவேற்றிக் கொடுப்பதாகவும், பின்னர் அரசின் நிதி ஒதுக்கீட்டில் அதைச் சரி செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.திருச்செந்தூர்த் தொகுதியில் இவர் காலத்தில் நிறைவேற்றப்பட்ட பெரிய திட்டம் என்று பார்த்தால் உடன்குடி அனல் மின்நிலையத்தை மட்டுமே சொல்ல முடியும். 1962ஆம் ஆண்டு நாசரேத்தில் தொடங்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வந்த திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பாலை 2003ஆம் ஆண்டு மூடப்பட்டது.
அதை மீண்டும் தொடங்க இவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதேபோல் ஆறுமுகநேரியில் ஒருகாலத்தில் உப்பளத் தொழில் சிறந்து விளங்கியது. இப்போது நலிந்து வரும் அந்தத் தொழிலை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தாமிரபரணியின் தென்கரைப் பாசனப் பகுதிகள் இந்தத் தொகுதியில் உள்ளன. அந்த நிலங்களில் நெல், வாழை, வெற்றிலை பயிரிடப்பட்டு வருகிறது. இவற்றின் பயிரிடும் பரப்பும் விளைச்சலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக வறட்சியின் காரணமாகக் குறைந்துகொண்டே வருகிறது.
தாமிரபரணியின் தென்கரைப் பாசனப் பகுதிகள் இந்தத் தொகுதியில் உள்ளன. அந்த நிலங்களில் நெல், வாழை, வெற்றிலை பயிரிடப்பட்டு வருகிறது. இவற்றின் பயிரிடும் பரப்பும் விளைச்சலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக வறட்சியின் காரணமாகக் குறைந்துகொண்டே வருகிறது.
தமிழ்நாட்டின் புவியியலில் பெரிய அதிசயமாகப் போற்றப்படும் தேரிக்காடுகள் இந்தத் தொகுதியில் உள்ளன. அமைச்சரின் ஊரான தண்டுப்பத்தே தேரியில்தான் அமைந்துள்ளது. இந்தத் தேரிக்காட்டில் பனை, கொல்லமா என்றழைக்கப்படும் முந்திரி, முருங்கை, சப்போட்டா, மரவள்ளி ஆகியவற்றைப் பயிரிடலாம். இது தொடர்பான வேளாண்மையில் அரசின் முயற்சியால் எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவரவில்லை. மாறாக மக்களின் சொந்த முயற்சியால் முருங்கை பயிரிடுவது அதிகரித்து வருகிறது.
ஒரு காலத்தில் கருப்பட்டி, கற்கண்டு, பனைப்பொருட்கள் எனப் பனைப்பொருளாதாரத்தின் தலைமையிடமாக விளங்கிய உடன்குடியில் இன்று பனைப்பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது. வறட்சியும் பனைகளை வெட்டி அழிப்பதுமே அதற்குக் காரணமாகும். தொடர்ந்து 26 ஆண்டுகளாகச் சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு பதவிக்காலங்களில் அமைச்சராகவும் இருந்தும் இந்தத் தொகுதியில் பனைப்பொருளாதாரத்தை மேம்படுத்த இவர் திட்டம் எதையும் தீட்டாதது பெருங்குறையாகும்.
திருச்செந்தூர் அரசியலில் கால்நூற்றாண்டுகளுக்கு மேல் தவிர்க்க முடியாத முகம் அனிதா இராதாகிருஷ்ணன். 2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் திமுகவுக்கு எதிரான அலை தவெகவுக்கு ஆதரவாக வீசியது. இந்த அலையில் அதிமுகவும் அடிபட்டுப் போனது. அத்தகைய சூழலிலும் திருச்செந்தூர் தொகுதியில் அனிதா இராதாகிருஷ்ணன் சுமார் ஆறாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். கடந்த முறையைவிட இம்முறை அவருக்குப் பதினொன்றரை விழுக்காடு வாக்குகள் குறைந்துள்ளன.
தவெக ஆட்சியமைத்த பிறகும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் உட்பட முன்னாள் அமைச்சர்கள் பலரும் தாங்கள் ஆட்சியில் அதிகாரத்தில் இருந்த மாயையில் இருந்து மீண்டுவரவில்லை. இந்நிலையில் ஆத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் விஜயை நீ, அவன், இவன் என ஒருமையில் பேசியுள்ளார். இது குறித்து உள்ளூர் தவெகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.அந்தப் புகாரின் அடிப்படையில் அனிதா இராதாகிருஷ்ணனைக் காவல்துறையினர் கைது செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவப் பரிசோதனைக்காகக் காவல்நிலையத்துக்குக் கொண்டுசென்றபோது, பேட்டியளித்த அனிதா இராதாகிருஷ்ணன், தன்னைத் தவெகவில் சேரும்படி காவல்துறையினர் மிரட்டுவதாகவும், ஆனால் தான் மாறப்போவதில்லை என்றும் கூறிப் பரபரப்பை ஏற்படுத்தினார். நீதிபதி முன் நிறுத்தியபோது அவரைச் சிறையில் அடைக்க உத்தரவிட, நீதிபதி மறுத்துவிட்டார்.ஒருமையில் பேசியதற்கெல்லாம் சிறையில் அடைக்க வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் அரசியல்வாதி ஒருவர் கூட வெளியில் நடமாட முடியாது என்ற உண்மை அப்போது தவெக அரசுக்கு உறைத்திருக்கும்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு அரசை விமர்சிப்பதை அனிதா இராதாகிருஷ்ணன் அடியோடு நிறுத்திக்கொண்டார். ஆனால் தன்னைத் தவெகவுக்கு இழுக்க முயற்சியும் மிரட்டலும் தொடர்வதாகக் கூறினார்.இதனிடையே 2001 – 2006 காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த அனிதா இராதாகிருஷ்ணன் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாகக் கூறி 2006ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்காலத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. பின்னர் அவர் திமுகவில் சேர்ந்துவிட்டார். எனினும் இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக நடைபெற்றது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனிதா இராதாகிருஷ்ணன், அவர் மனைவி, மகன்கள் என மொத்தம் ஏழு பேரையும் நவம்பர் மாதத் தொடக்கத்தில் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனால் இப்போதைக்கு அவருக்குச் சட்டச் சிக்கல் ஏதும் இல்லை. இருந்தாலும் திமுக தலைமையுடனான அவரின் நெருக்கம் குறைந்து விரிசல் அதிகமாகிக் கொண்டே போவதாகக் கூறப்படுகிறது. தவெக ஆட்சியைத் தக்க வைக்கத் தங்கள் உறுப்பினர் எண்ணிக்கையை வலுப்படுத்த வேண்டும், அல்லது எதிரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்ற இரண்டு உத்திகளையும் அந்தக் கட்சி திறமையாகப் பின்பற்றுகிறது.
அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 25 பேர் ஆதரித்து வாக்களித்தனர். அதையடுத்து 6 பேர் பதவி விலகித் தவெகவில் சேர்ந்துவிட்டனர். இதனால் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த இடங்களும் குறைகின்றன. தங்களுக்குத் தேவையான அறுதிப்பெரும்பான்மை எண்ணிக்கையும் குறைகிறது. இதை நன்கு உணர்ந்த தவெக தொடர்ந்து அதே பாணியில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை இழுக்க முயன்றே வருகிறது. அந்த இழுப்பில் அதிமுக, திமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளில் இருந்தும் ஐந்தாறு திமிங்கலங்கள் தவெக பக்கம் ஒதுங்கலாம் என்றும், அவர்களில் அனிதா இராதாகிருஷ்ணனும் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.
இருந்தாலும் அவர் தவெகவில் சேர்வது என்பது உடனடியாக இருக்காது என்றும், இப்போது காலியாக உள்ள தொகுதிகளின் இடைத்தேர்தல் நடந்து அதன் முடிவுகள் வெளியாகும்போது அடுத்த கட்சித்தாவல் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதை மெய்ப்பிப்பது போலவே திருச்செந்தூர்த் தொகுதியில் திமுக இளைஞரணித் தலைவரும், தமிழகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதியின் 50ஆவது பிறந்த நாள் விழாவில் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டுள்ள நிலையில், அனிதா இராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவில்லை.
இதை மெய்ப்பிப்பது போலவே திருச்செந்தூர்த் தொகுதியில் திமுக இளைஞரணித் தலைவரும், தமிழகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதியின் 50ஆவது பிறந்த நாள் விழாவில் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டுள்ள நிலையில், அனிதா இராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவில்லை.
அரசியலில் கால்நூற்றாண்டைத் தாண்டிய, இருபெரும் திராவிடக் கட்சிகளில் சேர்ந்து அதன் தலைமைகளிடம் நெருக்கமாக இருந்த, மூத்த, பக்குவமான அரசியல்வாதியான அனிதா இராதாகிருஷ்ணன், தங்கள் கட்சித் தலைவர் மகனின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்காதது தற்செயலானது இல்லை என்றே கருதலாம். கடலோரத் தொகுதிக்காரரான அனிதா இராதாகிருஷ்ணன் ஆளுங்கட்சியான தவெக விரிக்கும் வலையில் விரைவில் இல்லாவிட்டாலும், இடைத்தேர்தலுக்குப் பின் விழக் கூடும் என்றே அவருக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அப்படி நேர்ந்தால் மூன்றுபெரும் கட்சி கண்ட மூத்த அரசியல்வாதி என்ற பட்டம் அவருக்குக் கிடைக்கும்…என்னதான் நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம்..



