
வன்னியர்க்கு 15 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரித் திசம்பர் 17ஆம் நாள் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021ஆம் ஆண்டில் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் இருந்து வன்னியர்களுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பத்தரை விழுக்காடு உள் ஒதுக்கீடு பெறப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.
அதை எதிர்த்துச் சமூகநீதிப் பகைவர்கள் சிலர் தொடுத்த வழக்கால் வன்னியர் இட ஒதுக்கீடு செல்லாமல் போனதையும் குறிப்பிட்டுள்ளார்.
வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு பெற எல்லா உரிமைகளும் உள்ளது என்றும், உரிய தரவுகளைத் திரட்டி அவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் 2022 மார்ச் 31ஆம் நாள் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகப்பட்சமாக ஒரு மாதத்தில் தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம் என்றும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 1267 நாட்களாகியும் இன்று வரை இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் திமுக அரசைக் கண்டித்தும், வன்னியர்களுக்கு 15 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் திசம்பர் 17ஆம் நாள் அனைத்து மாவட்டங்களிலும் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அன்பு மணி தெரிவித்துள்ளார்.



