
அரசு முறை பயணமாக குரோஷியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஆண்ட்ரெஜ் ப்ளென்கோவிக், உற்சாக வரவேற்பு அளித்தார்.
மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ், வட அமெரிக்க நாடான கனடா, ஐரோப்பிய நாடான குரோஷியா ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சைப்ரசில் நடந்த வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற மோடி, அதனை தொடர்ந்து, கனடாவில் நடந்த ‘ஜி – 7’ உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
பின்னர், விமானம் வாயிலாக நேற்று குரோஷியா சென்றடைந்தார். அங்குள்ள ஜாக்ரெப் விமான நிலையத்தில், அரசு சார்பில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குரோஷியா பிரதமர் ஆண்ட்ரெஜ் ப்ளென்கோவிக், விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றார்.
குரோஷியா பிரதமர் அவரது சமூக வலைதள பக்கத்தில், ‘ஜாக்ரெபிற்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதாகவும், ஒரு முக்கியமான புவிசார் அரசியல் தருணத்தில் இந்த வருகை நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஜாக்ரெபில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற நடன நிகழ்ச்சியை பிரதமர் மோடி கண்டு ரசித்தார். இந்த சந்திப்பு இந்தியா — குரோஷியா இடையே பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில், ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



