ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா… வாபஸ் வாங்க ஓட்டம்..!

Advertisements

அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த இசக்கி சுப்பையா, கடந்த மே 26-ஆம் தேதி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அரசிதழிலும் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தார்.

தவெகவில் இணைந்தபோது, “எதிர்க்கட்சி எம்.எல்.ஏவாக இருந்ததால் தொகுதிக்கு எதிர்பார்த்த அளவில் நலத்திட்டங்களை கொண்டு வர முடியவில்லை; ஆளும் கட்சியில் இருந்தால்தான் தொகுதி மக்களுக்கு அதிகமாக பணியாற்ற முடியும்” என்பதே தனது முடிவுக்கான காரணம் என இசக்கி சுப்பையா விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால் சில மாதங்களிலேயே இந்த விவகாரத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.ராஜினாமா ஏற்கப்பட்டு, தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 28-ஆம் தேதி இசக்கி சுப்பையா மீண்டும் சட்டப்பேரவைத் தலைவரை அணுகினார். தனது ராஜினாமாவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் அல்லது இடைத்தேர்தல் நடைபெறும் வரை தன்னை எம்.எல்.ஏவாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு அவர் கூறிய காரணமும் அனைவராலும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.. அம்பாசமுத்திரம் தொகுதிக்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ இல்லாததால் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர் என்றும், இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகள் காரணமாக தேர்தலும் தாமதமாகி வருவதால், தொகுதி மக்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

ஆனால் இங்குதான் சட்டச் சிக்கல் தலைதூக்கி பார்த்தது. ஏற்கெனவே அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுவிட்டார். அதன்பின்னர் அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால், “ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட ராஜினாமாவை இப்போது எப்படி வாபஸ் பெற முடியும்?” என்ற கேள்வி ஆகப் போக எழுந்தது.

இசக்கி சுப்பையாவின் கோரிக்கையை சட்டப்பேரவைச் செயலகம் ஏற்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகின. சட்டப்பேரவை விதிகளின்படி, ஏற்கப்பட்ட ராஜினாமாவை பின்னர் திரும்பப் பெறுவதற்கு வழிவகை இல்லை என்றும், தொகுதி ஏற்கனவே காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்தகட்ட சட்ட நடைமுறையே தொடர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனால், “முதலில் ராஜினாமா… அடுத்ததாக கட்சி மாற்றம்… இப்போது ராஜினாமாவையே வாபஸ் பெற முயற்சி!” என்ற விமர்சனங்கள் அரசியல் களத்தில் எழத் தொடங்கின. இதற்கிடையே, அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே விசாரணையில் இருந்தது. அந்த வழக்கில் இசக்கி சுப்பையாவின் ராஜினாமாவும் இடம்பெற்றிருந்தது.

இந்த வழக்கில் அதிமுக தரப்பு, கட்சியின் கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏக்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை கோரப்பட்டிருந்த நிலையில், அவர்களின் ராஜினாமாவை அவசரமாக ஏற்றது சட்டரீதியாக கேள்விக்குரியது என வாதிட்டது.

அதே நேரத்தில், சட்டப்பேரவைத் தலைவர் தரப்பு, தன்னிச்சையாக ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏவை பதவியில் கட்டாயப்படுத்த முடியாது என்றும், ராஜினாமா மற்றும் தகுதி நீக்க நடவடிக்கைகள் இரண்டும் தனித்தனி விவகாரங்கள் என்றும் வாதிட்டது. இந்த சூழலில், வழக்கு இறுதி கட்டத்தை எட்டியிருந்தபோது, தனது ராஜினாமாவை திரும்பப் பெற விரும்புவதாக இசக்கி சுப்பையா தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்தது.

நீதிமன்றத்தின் முக்கிய காரணம் — வழக்கில் ஏற்கெனவே வாய்வழி வாதங்கள் தொடங்கி, விவகாரம் “part-heard” நிலையில் இருந்ததால், அந்த கட்டத்தில் புதிதாக ஆவணத்தைப் பதிவு செய்ய முடியாது என்பதாகும். அதாவது, இசக்கி சுப்பையா தரப்பில் “தொகுதி மக்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும்.

அதற்காக என்னை மீண்டும் எம்.எல்.ஏவாக செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டாலும், அந்த புதிய கோரிக்கையை தற்போதைய வழக்கில் சேர்க்க நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *