தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என்ற பேச்சு சட்டப்பேரவையில் தொடங்கி, “இந்தியாவின் நாளைய பிரதமர் விஜய்” என்ற முழக்கமாக மாறியிருக்கிறது. இதை வெறும் ரசிகர்களின் உணர்ச்சிப் பேச்சாக மட்டும் பார்க்க முடியுமா என்ற கேள்வி ஆகப்போக எழுந்திருக்கிறது.
ஏனா சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தொடங்கி தவெக எம்எல்ஏக்கள் வரை கூவும் வார்த்தை ஒன்றே ஒன்றுதான். அதுதான். “அடுத்த பிரதமர் விஜய்” என முழங்குவது, விஜய்யின் அரசியல் பயணம் தமிழக எல்லையைத் தாண்டி தேசிய அரசியலை நோக்கி நகர்கிறதா என்ற விவாதத்தை உருவாக்கியுள்ளது.
அதற்கேற்றாற்போல், விஜய்யின் ஒவ்வொரு பேச்சும் அறிவிப்பும் வடமாநில மொழிகளில் டப் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக கூறப்படுகிறது. வட இந்திய இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர்களை பயன்படுத்தி விஜய்க்கு தேசிய அளவில் ஒரு பிம்பத்தை உருவாக்கும் முயற்சியும் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது உண்மையில் திட்டமிட்ட அரசியல் விரிவாக்கமா அல்லது ரசிகர் மன்றங்களின் தன்னிச்சையான செயல்பாடா என்பதுதான் இப்போது முக்கியமான கேள்வி. இங்கேதான் காங்கிரஸின் கணக்கு சிக்கலில் சிக்குகிறது. தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. விஜய் முதல்வராக பொறுப்பேற்ற விழாவிலும் ராகுல் காந்தி பங்கேற்றதாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்த உள்ளாட்சி மற்றும் மக்களவைத் தேர்தல்களிலும் கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் இருந்திருக்கலாம். தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும் இந்த கூட்டணி பெரிய வெற்றியைப் பெற்றுத்தரும் என காங்கிரஸ் கணக்கு போட்டிருந்தால், அதே விஜய் தேசிய அளவில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது அந்தக் கணக்கையே தலைகீழாக மாற்றக்கூடும்.
**ஒரு கூட்டணிக் கட்சியை ஆட்சியில் அமர்த்திய பிறகு, அதே கட்சி தேசிய அளவில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கத் தொடங்கினால் என்ன ஆகும்?**இதுதான் காங்கிரஸுக்கு முன் நிற்கும் மிகப்பெரிய அரசியல் புதிர். இன்னொரு பக்கம் பாஜகவின் கணக்கைப் பார்த்தால், இந்த நிலைமை அக்கட்சிக்கு அரசியல் ரீதியாக சாதகமாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பல்வேறு அணிகளாகப் பிரிந்தால், நேரடியாக அதன் பலனைப் பெறப்போவது யார் என்ற கேள்வி எழுகிறது. விஜய் தனித்து களமிறங்கி, காங்கிரஸ் ஒரு பக்கம், மற்றொரு பிராந்திய அணி இன்னொரு பக்கம் என மும்முனைப் போட்டி உருவானால், விஜய்யை எதிர்த்து யார் போட்டியிடுகிறார்கள்?” என்பதைக் காட்டிலும் “விஜய்யின் வருகையால் யாருடைய வாக்குகள் அதிகமாகப் பிரிகின்றன? என்பதே தேர்தல் கணக்கில் முக்கியமாகிவிடும்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானாவில் பிஆர்எஸ், கேரளாவில் தவெகவின் விரிவாக்க முயற்சி என தென்னிந்திய அளவில் விஜய் தனது அரசியல் தொடர்புகளை விரிவுபடுத்தினால், இது தமிழக அரசியலை மட்டும் பாதிக்கும் விவகாரமாக இருக்காது. தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் புதிய அரசியல் அச்சை உருவாக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படலாம்.
குறிப்பாக கேரளாவில் விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் அரசியல் வாக்குகளாக மாறுமா என்பதுதான் சுவாரஸ்யமான கேள்வி. தமிழகத்தில் ரசிகர் பலம் அரசியல் பலமாக மாறியதுபோல் கேரளாவிலும் அது நடந்துவிட்டால், பாஜக மட்டுமல்லாமல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் தேர்தல் கணக்குகளிலும் மாற்றம் ஏற்படலாம்.
ஆனால் இங்கே ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது. ரசிகர் பட்டாளம் என்பது வாக்கு வங்கி அல்ல. சமூக வலைதள பிரபலத்தன்மை என்பது தேர்தல் வெற்றிக்கான உத்தரவாதமும் அல்ல.**விஜய் உண்மையிலேயே தேசிய அரசியலை நோக்கி நகர்கிறார் என்றால், தமிழகத்திற்கு வெளியே கட்சி கட்டமைப்பை உருவாக்குவது, வலுவான மாநிலத் தலைமைகளை உருவாக்குவது, கொள்கை ரீதியான தெளிவை வெளிப்படுத்துவது, வடஇந்திய அரசியல் மற்றும் பிராந்திய அரசியலின் சிக்கல்களை எதிர்கொள்வது என மிகப்பெரிய சவால்கள் அவருக்கு காத்திருக்கின்றன.
அதனால், இப்போதைய அரசியல் சூழலை ஒரு வரியில் சொல்வதென்றால்— விஜய் பிரதமர் ரேஸில் குதிப்பாரா என்பது இன்னும் கேள்விக்குறியாக இருக்கலாம். ஆனால் அவர் அந்த ரேஸில் குதிப்பார் என்ற பேச்சே காங்கிரஸ், பாஜக மற்றும் தென்னிந்திய பிராந்திய கட்சிகளின் தேர்தல் கணக்குகளை கலைக்கத் தொடங்கிவிட்டது என்பதுதான் அரசியல் ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயம்.
விஜய்யின் தேசிய அரசியல் ஆசை உண்மையானதா? அல்லது முதலில் தமிழகத்தை முழுமையாக கைப்பற்றிவிட்டு அடுத்த கட்டத்தை யோசிக்கும் திட்டமா? அடுத்த சில அரசியல் நகர்வுகள்தான் அதற்கான பதிலை சொல்லும். ஆனால் ஒன்று மட்டும் தெளிவு—விஜய் பிரதமர் என்ற முழக்கம் வெறும் கோஷமாகத் தொடங்கி, தேர்தல் கணக்காக மாறினால்… தென்னிந்திய அரசியல் களம் நிச்சயம் சூடுபிடிக்கும்!
ஆக தற்போது சிஎம் ஆகியிருக்கும் விஜய்யின் பிரதமர் எனும் பகல் கனவு பலிக்குமா என்பதையும், அதனால் காங்கிரசுக்கும் , தவெகவுக்கும் ஏற்படும் விரிசல் மோதலையும் மேலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் பாஜக தலைகளுக்கு ஜாக்பாட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


