
கோவில்களில் செல்பேசியைப் பாதுகாக்க ஐந்து ரூபாய் வசூலிப்பது கேரள மாநிலத்திலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்பேசி கொண்டுசெல்லத் தடை விதிக்கக் கோரித் தொடுத்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டில் அனைத்து கோவில்களிலும் செல்பேசி கொண்டுசெல்லத் தடை விதித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதையடுத்துக் கோவில்களில் ஐந்து ரூபாய் கட்டணம் பெற்றுக்கொண்டு செல்பேசிகள் பாதுகாக்கப்படுவதாகவும், இந்த 5 ரூபாய் கட்டணம் ஊழியர்களின் சம்பளத்துக்கும் ஏழை எளிய மக்களின் அன்னதானத்திற்கும் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
கேரள மாநிலத்திலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் இந்த நடைமுறை உள்ளதாகவும் தெரிவித்தார்.
விசேஷ நாட்களில் செல்பேசி வாங்கி வைக்கும் நடைமுறை வேண்டாம் என ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் கூறினார்.



