
கடலூரில் நடைபெறும் ஐஜேகே மாநாட்டிற்கு ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்ற நபர்கள் ஆலங்குடியில் வாகனங்களை அணிவகுத்து நிறுத்தியதால் அமைச்சர் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
கடலூரில் நடைபெறும் ஐஜேகே மாநாட்டிற்கு செல்ல 5க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்ற நபர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள காமராஜரின் உருவச்சிலைக்கு வாகனங்களை சாலைகளில் அணிவகுத்து நிறுத்திவிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாகச் சென்ற தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதியின் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இந்நிலையில் உடனடியாக காவல்துறையினர் சாலை ஓரத்தில் போக்குவரத்துக் இடையூறாக இருந்த விளம்பரப்பதாகைளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தொடர்ச்சியாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



