
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித். அவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. அஜித்தின் 62-வது படமான இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துடன் திரிஷா, ஆரவ், ரெஜினா, ஆக்ஷன் கிங் அர்ஜுன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி நடைபெற்று வந்தது. அங்கு 90 சதவீத படப்பிடிப்பை முடித்த படக்குழு, கடந்த மாதம் சென்னை திரும்பியது. இதையடுத்து எஞ்சியுள்ள படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்தி முடிக்கத் திட்டமிட்டு உள்ளனர். ஒரு மாதமாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவளித்து வந்தார் அஜித்.
அண்மையில், நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக்கின் 9-வது பிறந்தநாளை சென்னையில் குடும்பத்தினருடன் கொண்டாடினார். அப்போது மனைவி ஷாலினி மகள் அனோஷ்கா ஆகியோரும் உடன் இருந்தனர். ஆத்விக்கின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலாகின.
இந்த நிலையில், நடிகர் அஜித் தற்போது திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அஜித் சிகிச்சை பெற்று வருகிறாராம். அவரது உடலுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை என்றும், வழக்கமான பரிசோதனை செய்துகொள்ளவே அஜித் அங்குச் சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பரிசோதனைகள் முடிந்து ஓரிரு நாளில் அஜித் வீடு திரும்புவாரெனக் கூறப்படுகிறது.


