
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை ராஜ்நிவாசில் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:40 ஆண்டுகளுக்கு மேல் நிர்வாக அனுபவமும், எந்தப் பதவியில் இருந்தாலும் அந்தப் பதவிக்குப் பெருமை சேர்த்ததோடு, குஜராத் மாநில வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துப் பாரத பிரதமரின் நன்மதிப்பை பெற்றவருமான தாங்கள் எங்கள் புதுச்சேரி மாநிலத்திற்கு துணைநிலை ஆளுநராகப் பதவி வகிப்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
அதிமுக பொதுச்செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் சீரிய தலைமையிலான அதிமுகவின் புதுச்சேரி மாநில கழகத்தின் சார்பில் இதுநாள் வரை, புதுச்சேரியில் தீர்க்கப்படாமல் உள்ள ஒருசில முக்கிய பிரச்சனைகளையும், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த கால மத்திய அரசுகளால் பறிக்கப்பட்ட பல்வேறு உரிமைகளைப் பெற்றுத்தரவும், தங்களின் மேலான கவனத்திற்கு சிலவற்றை தெரிவித்துக்கொள்கிறோம்.
2026-2031 ஆகிய ஐந்தாண்டு காலத்திற்கு நிதி பகிர்வுபற்றி முடிவு செய்ய 16-வது நிதி ஆணையம் திரு.அரவிந்த வனாகிரியா தலைமையில் சமீபத்தில் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. அந்த நிதி ஆணையத்தின் பரிந்துரையில் லடாக் மற்றம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களைப் போல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் நிதி ஒதுக்கீடு அளிக்கத் தாங்கள் தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களுக்கு யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு 100% நிதியுதவியை மத்திய அரசு வழங்கத் தாங்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில் அனைத்து வேலைவாய்ப்புகளிலும், புதுச்சேரி மாணவர்களுக்காக 25 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 25 சதவீத உள் ஒதுக்கீட்டைப் புதுச்சேரி மாணவர்களுக்காக வழங்க வேண்டும்.
மத்திய அரசால் 25-06-2015-ல் அமுல்படுத்தப்பட்ட அம்ருத் திட்டத்தின் மூலம் நகரப்பகுதி உள்கட்டமைப்பு வசதிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சுகாதாரமான குடிதண்ணீர், கழிவுநீர், பாதாள சாக்கடை பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசின் அம்ருத் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மாநிலத்தில் நடைபெறாமல் உள்ள உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.
புதுச்சேரியில் இயங்கும் மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் முதுநிலை மருத்துவ படிப்பிற்கு (PG) 50 சதவீதமான இடங்களைக் கடந்த நான்கு ஆண்டுகாலத்திற்கு மேலாக வழங்கி வருவது போன்று இவ்வாண்டு 50 சதவீதமான MBBS இடங்களைப் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் மருத்துவ கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு ஒன்றாம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்புவரையென இருப்பதை, தமிழகம் போன்று 6-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்புவரையென மாற்றம் செய்ய வேண்டும்.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட கட்டாய கல்வி உரிமை சட்டம் (RTE) 2009-ஐ அமுல்படுத்தி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத மாணவர்கள் இலவச கல்வி பயில உரிய வழிவகை செய்யப்பட வேண்டும்.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் (NFSA) 2013-ஐ புதுச்சேரி மாநிலத்தில் அமுல்படுத்தி 10 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளைத் திறந்து அத்தியாவசிய உணவு பொருட்களைப் பொதுவினியோக திட்டத்தின் மூலம் மானிய விலையில் அரசு வினியோகம் செய்ய வேண்டும்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத பிராந்திய இடஒதுக்கீடு புதுச்சேரியில் உயர்கல்வியில் 25 சதவீதம் வழங்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் புதுச்சேரி பிராந்தியத்தை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.
அட்டவணை இனத்தவருக்குச் சாதி சான்றிதழ் பெறுவதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 1964-ம் ஆண்டு என்பதை மாற்றம் செய்து ஓபிசி பிரிவினருக்கு உள்ளது போன்று 2001-ம் ஆண்டை நிர்ணயம் செய்ய வேண்டும். சாதி சான்றிதழ் பெரும்போது தந்தை வழி என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தாயின் ஆதாரங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை உடனடியாக அரசாணையாக வெளியிட வேண்டும்.


