ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவல் விவகாரத்தில், அனைத்து ஆவணங்களும் சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளன என்றும், சட்டப்படி சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் என்றும், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து, மனு அளித்த பின்னர், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற, ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த விவகாரம் தொடர்பாக, கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஏற்கனவே சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், அந்த மனு தொடர்பாக சபாநாயகர் சில விளக்கங்களை கோரியிருந்த நிலையில், அதற்கான அனைத்து ஆவணங்கள், கட்சியின் அரசியலமைப்பு விதிகள் மற்றும் தேவையான விளக்கங்கள் அடங்கிய மனுவை இன்று நேரில் வழங்கியுள்ளதாகவும், சட்டப்பேரவை விதிகளின்படி சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற முழு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகளில் எதிர்க்கட்சித் தலைவருக்கே, தனிப்பட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்ற கட்சிகளின் சட்டமன்றத் தலைவர் அல்லது கொறடா போன்ற பதவிகள் நடைமுறையின் அடிப்படையில் மட்டுமே அங்கீகரிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், அதிமுக தொடர்ந்து வலுவாக செயல்பட்டு வருவதாகவும், இளைஞர்கள் அதிக அளவில் கட்சியில் இணைந்து வருவதாகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, கட்சியை வலுப்படுத்தி வருவதாகவும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.



