
முன்னாள் அதிமுக அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தமிழக வெற்றி கழகத்தில் இணையப் போவதாக தகவல்கள் கசிந்து உள்ளன . ஏற்கனவே முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த நிலையில் தற்போது வைத்திலிங்கமும் இணைகிறார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய போது யார் வேண்டுமானாலும் எங்களுடன் கூட்டணி சேரலாம் நிச்சயமாக அவர்கள் தகுதிக்கு தக்க படி அமைச்சரவையில் இடம் தரப்படும் என அறிவித்தார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பதற்கு அதிமுக பாஜக போன்ற கட்சிகள் முன் வந்தன. ஆனால் அவர்களுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்பொழுது அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பனையூர் பங்களா சென்று நடிகர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நடிகர் விஜய்யை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். தற்பொழுது கொங்கு மண்டலத்தில் தமிழக வெற்றி கழகத்தை நிலை நிறுத்துவதற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தீவிர பணிகள் ஆற்றி வருகிறார். அதே சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு நாஞ்சில் சம்பத்தும் தயாராகி வருகிறார்.
இதற்கிடையே செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம் என்பவர் அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளார். அதிமுக பேரவை செயலாளராக இருந்த இவர் செங்கோட்டையனுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் திமுகவில் இணைந்தார். அங்கு விவசாய அணி செயலாளர் பதவி தரப்பட்டது. தற்பொழுது இவர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு சென்று அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஓபிஎஸ் டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்து பேசிய அண்ணாமலை டெல்லிக்கு சென்று இருக்கிறார். அவர் அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசுகிறார் . அதிமுக பாஜக கூட்டணியோடு ஓபிஎஸ் டிடிவி தினகரன் ஆகியோரை இணைத்துக் கொள்ளும் வகையில் ஆலோசனைகள் நடைபெறும் என தெரிகிறது.
இதற்கிடையே முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தமிழக வெற்றி கழகத்தில் இணையப் போகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்பொழுது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் ஒரத்தநாடு தொகுதியில் இருந்து வெற்றி பெற்று சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
கடந்த 2001 ஆம் ஆண்டில் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சராகவும் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை வீட்டு வசதி மற்றும் ஊரக வீட்டு வசதி துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். அதிமுகவை பொறுத்த வரையில் துணை ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.
மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இவர் ஒரத்தநாடு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே அவர் வகித்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இவருக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன் குடிகாடு என்பதாகும் இவர் சென்னையில் உள்ள மாநில கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழக அரசில் அமைச்சர் பொறுப்பு மற்றும் அதிமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்தார். சமீப காலமாக ஓபிஎஸ் ஆதரவாளராக பணியாற்றி வந்தார் வைத்திலிங்கம். இந்த நிலையில் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போவதாக வெளிவந்த தகவல் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் இருந்து செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்திற்கு தாவிய நிலையில் தற்போது இவர் டெல்டா மாவட்டத்தில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாவி இருக்கிறார். 70 வயதாகும் வைத்தியலிங்கத்திற்கு அனேகமாக டெல்டா பகுதியில் பொறுப்பாளர் பதவி தரப்படும் என தெரிகிறது.



