
தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.
தமிழகத்தைக் காப்போம் என்னும் பெயரில் பரப்புரைப் பயணத்தைத் தொடக்கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவரிடம், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா கூறியுள்ளது பற்றிச் செய்தியாளர்கள் வினவினர், அதற்குப் பதிலளித்த பழனிச்சாமி, அடுத்த தேர்தலில் அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெறும் என்றும், அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என்றும் தெரிவித்தார்.
இது கூட்டணி ஆட்சிக் கனவில் இருக்கும் பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


