
ஆம் ஆத்மி எம்.பி வீட்டின் கதவைத் தட்டிய அமலாக்கத்துறை!
கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 17ல் புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதன் காரணமாக 749 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமைகள் கொடுக்கப்பட்டன. இந்த உரிமையின்படி மதுக்கடை உரிமையாளர்கள் தாங்களே விலையை நிர்ணயம் செய்து கொள்ளவும், வாடிக்கையாளர்களுக்கு இலவசத்தை வழங்கவும், அதிகாலை மூன்று மணிவரை கடைகளைத் திறந்து இருக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்தப் புதிய மதுபான கொள்கையின்படி பல்வேறு விவகாரங்களில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகத் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் டில்லி கவர்னர் சக்சேனாவிடம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார். அதன்படி சிபிஐ விசாரணை நடத்தத் கவர்னர் பரிந்துரை செய்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி பல்வேறு இடங்களில் சிபிஐ விசாரணை செய்தது. இந்த வழக்கில் டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 36 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளரும், எம்.பி., யுமான சஞ்சய் சிங் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், இந்தச் சோதனை நடப்பதால் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


