
தேனி மாவட்டம் வருசநாட்டில் 1966ஆம் ஆண்டு பிறந்தவர் ஜி.மாரிமுத்து. இவர், 1999ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘ஆசை’ படம் மூலம் உதவி இயக்குநராக சினிமா பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவுடன் அஜித்தின் வாலி படத்தில் அசோசியேட் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவின் நெருங்கிய நண்பராக திரைப்பயணத்தை ஆரம்பித்த மாரிமுத்து, மணிரத்னம், சீமான் ஆகியோரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். 2008ஆம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் கண்ணும் கண்ணும் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து, 2014-ல் விமல், பிரசன்னா நடிப்பில் புலிவால் படத்தையும் இயக்கியுள்ளார். அதே போல் ஒரு நடிகராகவும் மிகப்பிரபலமாக மாறியுள்ளார்.
வாலி, உதயா, நிமிர்ந்து நில், ஜீவா, மருது, குற்றமே தண்டனை, கொடி, பைரவா, பரியேரும் பெருமாள், சுல்தான், லாபம், விக்ரம், ஜெயிலர், இந்தியன் 2 என 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ என்ற சீரியல் மூலம் ஆதி குணசேகரன் என்ற கம்பீரமான கதாபாத்திரமாக நீங்காத இடம்பிடித்துள்ளார். இவரது மறைவு திரையுலகினர் மட்டுமின்றி, ரசிகர்களையும், பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


