
நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஏழு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரும் என அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட சிறுபான்மை பிரிவுச் செயலாளர் அப்பாஸ் அலி ஏற்பாட்டில் ஆட்டோ ஓட்டுநர்களுக்குச் சீருடையுடன் பொது மக்களுக்குப் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி மாபெரும் வெற்றி பெரும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் நேற்று நெய்வேலியில் நடைபெற்ற புரட்சித்தலைவி அம்மாவுடைய வென்கல சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் நிர்வாகிகளுடன் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் அதுவே அதற்குச் சாட்சி அதுமட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் மிகுந்த எழுச்சி அடைந்திருப்பதாகவும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்தார்.
மேலும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் என்று எதிர்பார்ப்பார்கள் ஆனால் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த ஏழு மாத காலத்திலேயே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் என்பது தன்னுடைய தனிப்பட்ட கருத்து எனத் தெரிவித்தார்.
அப்போது தமிழக முதல்வராக நாட்டு மக்களின் ஒத்துழைப்போடு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவார் என்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இதுவரை 450 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் கூட்டணி கட்சிகள்குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் அறிவிப்பார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது செய்த பல்வேறு சாதனைகளை விளக்கிக் கூறி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்வந்த்ராவ் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பக்தவச்சலம் மாவட்ட வர்த்தக அணி தலைவர் காதர் உசேன் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


