பட்டியல் சமூகத்தில் இருந்து ஒரு முதல்வர் வரவேண்டும் – ஆளுநர் பேச்சு!

Advertisements

கடலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த சாமி சகஜானந்தாவின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு பேசுகையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அரசியல் காரணங்களுக்காக 200 பிரிவுகளுக்கு மேலாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். நாம் அவர்களை ஒன்றிணைத்து வைக்க வேண்டும்.

பட்டியல் சமூகத்திலிருந்து ஒரு முதல்வர் வர வேண்டும். சுவாமி சகஜானந்தாவின் கனவை நிறைவேற்ற உறுதி ஏற்க வேண்டும் என்று கூறினார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சாமி சகஜானந்தாவின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது ஆளுநர் ரவி கூறுகையில், “இது சிவன் பிறந்த மண். இங்குச் சாமி சகஜானந்தாவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இறைவழி கொண்டவர் சுவாமி சகஜானந்தா. சுவாமி சகஜானந்தா தோன்றிய காலத்தில் நாம் இரண்டு வெவ்வேறு விஷயத்தில் கருத்துகளைப் பார்த்து வருகிறோம்.எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள்.

நாம் இரண்டு விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும். கடவுள் இல்லை என்கிற சக்தியை எதிர்கொள்ள வேண்டும். இரண்டாவது மதமாற்றத்தை எதிர்கொள்ள வேண்டும். கால்டுவெல் அமெரிக்க பத்திரிகையில் இந்திய கலாச்சாரம் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார்.

இதையும் எதிர்கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குக் கால்டுவெல் கூறியது இந்திய கலாச்சாரத்தை நாம் முழுமையாகச் சீர் கெடுத்தால் மட்டுமே நாம் ஆட்சி செய்ய முடியும் என்று கூறினார். அதனால் மதமாற்றம் இங்கு நடைபெற்றது.

கிறிஸ்தவ மிஷனரிகள் தங்கள் மதத்துக்கு இங்குள்ளவர்களை மாற்ற முனைந்தார்கள். ஆங்கிலேயே அரசாங்கம் நம்மை ஆளவந்த பிறகு நாம் எப்படி இருந்தோம்? அவர்கள் ஆள்வதற்கு முன்பு கலாச்சாரம் எப்படி இருந்தது? என்று அதையும் நாம் ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.

ஆங்கிலேயே அரசாங்கம் வந்தபிறகு பட்டியல் சமூக மக்களை, எப்படி ஆட்சி செய்தார்கள் என்பதை நாம் நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆங்கிலேய அரசாங்கம் என்பது 200 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று ஆளுநர்களை நியமித்து நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் ஆராய்ந்து அதிலிருந்து ஒரு அறிக்கை எடுத்து அதன் மூலம் சீர்குலைக்க தங்களது பணியை ஆரம்பித்தார்கள். அதற்காக ஆங்கிலேயர்கள் தெளிவாகப் பணிகளை முன்னெடுத்து துவக்கினார்கள்.

மகாத்மா காந்தி ஒருமுறை கூறும்போது, “பிரிட்டிஷ் அரசிடம் நீங்கள் இங்கு வருவதற்கு முன்பு அழகான மரமாக இருந்தோம், நீங்கள் வந்த பிறகுதான் கிளைகளை அழித்து விட்டீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

கீழவெண்மணியில் பட்டியல் சமூகத்தினர் கொல்லப்பட்ட கிராமத்துக்குச் சென்றேன் அங்கே ஒருவருக்கு கூடச் சரியான வீடு இல்லை. அதனால் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் அங்கு வீடுகளைக் கட்டுவதற்கான திட்டத்தைச் செயல்படுத்த விரும்புகிறோம்.

கிராம அளவில் சென்று என்ன நடக்கிறது? என்று தெரிந்து கொண்டு நந்தனார் கல்வி கழகத்தைச் சுவாமி சகஜானந்தா துவக்கினார். இதன் மூலம் இந்தச் சமூகத்தை உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையோடு கல்வி மூலம் சமுதாயத்தைச் சீரமைக்க முன்னெடுத்தவர் ஆவார். சுதந்திரத்துக்கு பிறகு மூன்றாவது ஒரு தூய சக்தி வந்தது.

அது எங்கள் கடவுளை வணங்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. பட்டியல் சமூகத்து ஊராட்சி தலைவருக்கு நாற்காலி கொடுப்பதில்லை. காலணி அணிந்து கொண்டு கிராமத்தில் செல்வது சாத்தியமில்லை, இது போன்ற சூழ்நிலை தான் இருந்தது. அது தற்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சுவாமி சகஜானந்தா இந்த மண்ணில் சமூக கல்வியாளராக இருந்தார். கல்வி மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டார். இங்குப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அரசியல் காரணங்களுக்காக 200 பிரிவுகளுக்கு மேலாகப் பிரித்து வைத்துள்ளனர். நாம் அவர்களை ஒன்றிணைத்து வைக்க வேண்டும்.

பட்டியல் சமூகத்திலிருந்து ஒரு முதல்வர் வர வேண்டும். சகஜானந்தாவின் கனவை நிறைவேற்ற உறுதி ஏற்க வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், சுவாமி சகஜானந்தா பெயரில் ஒரு இருக்கை அமைக்கப்படும் என நிச்சயம் உறுதி அளிக்கிறேன்.” இவ்வாறு ஆளுநர் ஆர் என் ரவி பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சிதம்பரத்தில் உள்ள நந்தனார் அரசு மேல்நிலைப்பள்ளி விடுதிக்கு ஆளுநர் ரவி சென்றார். அங்கு மாணவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார்.

மேலும் ஆசிரியர்களிடம் மருத்துவம், இன்ஜினியிரிங் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தையும் கேட்டு அறிந்தார்.இதனைத் தொடர்ந்து அரசு மேல்நிலைப்பள்ளி விடுதி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *