
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி அதிமுக சார்பில் நடைபெற்ற கோல போட்டியில் பங்கேற்ற மகளிருக்கு சுமார் 3 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்களை மாநில செயலாளர் அன்பழகன் வழங்கிப் பாராட்டினார்.
புதுச்சேரி அதிமுக சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா, புதுவையின் 30 தொகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
விழாவின் ஒரு பகுதியாகப் புதுச்சேரி கடற்கரை சாலையில் மாபெரும் கோலப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலை சின்னம், நமது வாக்கு இரட்டை இலை சின்னத்திற்கு, 40 தொகுதிகளிலும் வெற்றி நமதே உட்பட பல்வேறு கோலங்களை வரைந்து அசத்தினர். இதனை மாநில செயலாளர் அன்பழகன் நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டு மகளிர்களை வெகுவாகப் பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து உப்பளம் அம்பேத்கர் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி, போட்டியில் பங்கேற்ற மகளிருக்கு வாஷிங் மிஷின், ப்ரிட்ஜ், தையல் இயந்திரம், குக்கர் உட்பட சுமார் 3 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கிப் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், , மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார், முன்னாள் எம்எல்ஏ கோமலா, மாநில இணை செயலாளர் வீரம்மாள், மாநில துணைச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாகமணி, மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன், தொகுதி செயலாளர்கள் ஆறுமுகம், கமல்தாஸ், கோபால் மற்றும் முன்னாள் மாநில மாணவர் அணி பொருளாளர் பார்த்தசாரதி, ஆகியோர் உடனிருந்தனர்.


