
கல்வராயன் மலை பகுதியில் தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டையில் 40 பேரல்களில் வைக்கப்பட்டிருந்த 8000 லிட்டர் கள்ளச்சாராயத்தை கண்டுபிடித்துச் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர், மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைத் தனிப்படை போலீசார் விரட்டிப் பிடித்துக் கைதுசெய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா அவர்களின் உத்தரவுப்படி கச்சராயபாளையம் காவல் ஆய்வாளர் நந்தகுமார் கரியாலூர் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை காவல்துறையினர் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மணியார்பாளையம், வள்ளப் பாறை ஓடை அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 40 பேரல்களில் சுமார் 8,000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் மற்றும் 30 லிட்டர் பிடிக்கக்கூடிய 04 லாரி ட்யூபுகளில் 120 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கண்டுபிடித்துச் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர். மேலும் தனிப்படை காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்ற இரண்டு குற்றவாளிகளான மணியார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் செந்தில் ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தைச் சீர்குலைக்கும் வகையில் கள்ளச்சாராயம், மற்றும் கஞ்சா விற்பனை, கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கள்ளச்சாராயத்தை காய்ச்சினாலோ கள்ளச்சாராயத்தை கடத்தினாலோ மற்றும் கள்ளச்சாராயத்தை வியாபாரம் செய்பவர்கள்மீது பாரபட்சமின்றி குன்றத்த தடுப்பு சட்டத்திற்கு கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

