Advertisements
வாணியம்பாடி அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அதேபோல் எதிர்திரையில் அரசு பேருந்தும் வந்துள்ளது. வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் பகுதியில் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை உடைத்து கொண்டு எதிர் திசையில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து சொகுசு பேருந்து மீது மோதியுள்ளது. நேருக்கு நேர் இரு பேருந்துகளும் மோதி கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்தவர்கள் அரசு பேருந்து ஓட்டுநர் ஏழுமலை, தனியார் சொகுசு பேருந்து நடத்துநர் முஹம்மத் பைரோஸ், சித்தூரை சேர்ந்த அஜித்குமார், கோலர் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் முகமது நதீம், சென்னையை சேர்ந்த கிருத்திகா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த 5 பேருக்கு மேல் சிகிச்சை அளிக்க வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலர்பர்ட் ஜான் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை மேற்கொண்டார். அதேநேரம் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தனர்.