
102 பதக்கங்களை கைப்பற்றிய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
சீனாவின் ஹாங்சு நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டு 4வது சீசன் நடக்கிறது. இந்திய வீரர் பிரமாதமாக விளையாடி, பதக்கத்தை வென்று வருகின்றனர்.
ஆடவர் 400 மீட்டர் டி47 தடகளத்தில் இந்திய வீரர் திலீப் மஹத் காவித் தங்கம் வென்று அசத்தினார். 49.48 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து திலீப் சாதனை படைத்தார்.
பி.ஆர்.3 கலப்பு இரட்டையர் படகுப் போட்டியில் அனிதா மற்றும் நாராயண ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
இதுவரை 26 தங்கம், 30 வெள்ளி, 46 வெண்கலம் என 102 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா பதக்கப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. சீனா 206 தங்கம், 164 வெள்ளி, 140 வெண்கலம் என 510 பதக்கங்களை கைப்பற்றிய பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
பிரதமர் மோடி பாராட்டு:
இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 100 பதக்கங்கள் பெற்றுள்ள இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள். வீரர்களின் கடின உழைப்பு, மன உறுதியால் கிடைத்துள்ள இந்த வெற்றி ஈடு இணையற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது.
இந்த வெற்றிக்கு நமது விளையாட்டு வீரர்களின் திறமை, கடின உழைப்பு, உறுதி ஆகியவையே காரணம். இந்த குறிப்பிடத்தக்க மைல்கல். இந்த வெற்றிகள் நம் அனைவரையும் ஊக்குவிக்கின்றன. நம் இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை நினைவூட்டுகின்றன. இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



