13 கிராம மக்களின் போராட்டத்திற்கு தவெக ஆதரவு..! விஜய்யின் மாஸ்டர் பிளான்.!

Advertisements

தமிழ்நாட்டின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படும் பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம் மீண்டும் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. விஜயின் அரசியல் என்டரியில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 13 கிராம மக்களுக்கு ஆதரவு அளித்தது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், கடந்த 2 -3 நாட்களாக முக்கிய துறையின் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை செய்து வரும் வேளையில் பரந்தூர் விமான நிலையம் திட்டம் குறித்த விவாதம் வந்தது. இந்த நிலையில் இந்த திட்டம் தொடர்பாக மூத்த அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசனை நடத்தி வருவது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள பரந்தூர் விமான நிலையம், கடந்த சில ஆண்டுகளாக அரசியல், சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் எதிர்ப்பின் மையமாக இருந்து வருகிறது. குறிப்பாக, இந்த திட்டத்திற்கு எதிராக முன்பு நேரடியாக குரல் கொடுத்த விஜய் தற்போது முதலமைச்சராக இருந்து இதை மறுபரிசீலனை செய்ய உள்ள சூழல், தமிழக அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஏகனாபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வந்தனர். நிலம் பறிமுதல், விவசாய நிலங்கள் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வாழ்வாதார இழப்பு போன்ற காரணங்களால் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த 2025 ஜனவரி 20ஆம் தேதி, விஜய் நேரடியாக பரந்தூர் சென்று போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அப்போது போலீசார் நேரடி அனுமதி மறுத்ததால், அருகிலுள்ள தனியார் இடத்தில் போராட்டக்குழு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு அப்போது அரசியல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த சூழலில் திட்டத்திற்கு எதிராக நிலைப்பாடு எடுத்திருந்த விஜய், தற்போது முதலமைச்சராக இருந்து அதே திட்டத்தை அதிகாரிகளுடன் ஆய்வு செய்வது அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் மூலம் இத்திட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்லுமா அல்லது இந்த ஆட்சி காலத்தில் அப்படியே முடங்கிவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம் சுமார் ரூ.27,400 கோடி மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் இந்த திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பிறகு ஆண்டுக்கு சுமார் 10 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை விமான நிலையத்தில் விமான நெரிசலை குறைப்பதோடு, தமிழகத்தை தென்னிந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து மையமாக மாற்றும் நோக்கம் அரசிடம் உள்ளது.

முந்தைய திமுக அரசு இந்த திட்டத்தை “சிறப்பு திட்டம்” என அறிவித்து, தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் கீழ் விரைவாக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதுவரை சுமார் 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பரந்தூர் திட்டத்திற்கு எதிராக 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மறுபுறம், தொழில் மற்றும் முதலீட்டு வட்டாரங்கள் இந்த திட்டம் பாதியில் நிறுத்தப்படக்கூடாது என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சர்வதேச தரத்திலான இரண்டாவது விமான நிலையம் அவசியம் என்ற கருத்து தொழில்துறையினரிடையே வலுவாக உள்ளது.

தமிழ்நாடு தற்போது உற்பத்தி, ஏற்றுமதி, எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் மற்றும் ஐடி துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பெரிய அளவிலான விமான சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து உள்கட்டமைப்பு தேவை. இதனால், பரந்தூர் திட்டம் வெறும் விமான நிலைய திட்டமாக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கிய உள்கட்டமைப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது.

தற்போது புதிய அரசு நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் அமைச்சரவை பொறுப்பு ஒதுக்கீட்டில் கவனம் செலுத்தி வருவதால், திட்டத்தில் உடனடி முன்னேற்றம் எதுவும் நடைபெறவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆனால் முதலமைச்சர் விஜய் விரைவில் முழுமையான ஆய்வு நடத்தி, அதிகாரிகள், தொழில் துறை மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டு இறுதி முடிவெடுக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *