
சென்னை சென்டிரல் – விமான நிலையம் இடையேயான நீல வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை:சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரெயில் சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகச் சென்னை சென்டிரல் – விமான நிலையம் இடையே நீல வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை இன்று நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் செல்ல ஆலந்தூர் மெட்ரோ சென்று பச்சை வழித்தடத்தில் மாறிப் பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விம்கோ நகர் – விமான நிலையம், சென்னை சென்டிரல் – பரங்கிமலை இடையேயான மெட்ரோ ரெயில் சேவை வழக்கம்போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகச் சென்டிரல் – விமான நிலையம் இடையேயான நீல வழித்தட மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைத்துள்ளனர்.

