சூறாவளி காற்று, கடல் சீற்றம் காரணமாக, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விசைப்படகுகள் கடந்த 2 மாத காலமாக மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீன்பிடி தடைக்காலம் கடந்த 14-ந் தேதி அன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது. தடைக்கால சீசன் முடிவடைந்த நிலையிலும், பலத்த சூறாவளி காற்று, கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், ராமேசுவரம் பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் நாளை காலை முதல் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


