
டிசம்பர் 26-ஆம் தேதி தமிழகக் கடலோர பகுதிகளில் ஏற்பட்ட பயங்கரமான ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி பேரிடரால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
2004 -ஆம் ஆண்டு நிகழ்ந்த இச் சம்பவம் மனதில் ஆறாத சுவடாக உள்ளது. சுனாமி தினத்தையொட்டி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பூமியின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் பங்கு 2 பங்கு நீர் சுழ்ந்துள்ளது. 1 பங்கு மட்டுமே நிலம். புயல் அடிக்கும் போது மட்டும் கடல் சீற்றத்துடன் காணப்படும். ஆனாலும் கரையைத் தாண்டி செல்வதில்லை.அப்படித்தான் எல்லோரும் நினைத்திருந்தோம், ஆனால் அலை கரையைத் தாண்டி ஊரின் உள்ளே வந்தது.
அதுவும் சாதாரணமான அலை அல்ல. ஆழிபேரலை கடந்த ஆண்டு 2004 டிசம்பர் 26, 19 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் எழுந்து 14 நாடுகளில் கடலோரப் பகுதிகளை தாக்கியது.
திடீரென்று தாக்கியதால் மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஐயோ என்று அலறியபடி ஓடி வந்தனர். கரையோர மக்கள் உயிர் பிழைக்க ஓடினர். இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் கரையோரம் இருந்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் இறந்தார்கள். 43 ஆயிரத்து 786 பேரை காணவில்லை. தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் சென்னை முதல் குமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன.
அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் பலியானார்கள். 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்தனர். உயிர் பலியை தாண்டி, பொருட்களின் சேத மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். சுனாமியின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் ஏராளம். கடலோரப் பகுதியில் அன்றைக்கு எழுந்த மரண ஓலம் இன்னும் அடங்கவில்லை.
மீளாத் துயரம் என மக்கள் இன்றும் ஏங்கும் அளவுக்கு உறவுகளை பிரிந்து சென்று பெருந்துயரம் தந்த சுனாமி எனும் இயற்கை பேரழிவின் 19-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை முதல் குமரி வரை கடலோரம் வசிக்கும் கிராம மக்கள் அமைதி பேரணியாக சென்று கடலில் பால் ஊற்றி, பூக்களை தூவி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



