
இளைஞர்கள் தாங்கள் கற்ற கல்வியை நாட்டின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என்று மிசோராம் மாநில முதலமைச்சர் லால்டுகோமா தெரிவித்துள்ளார். கோவை காருண்யா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வேந்தர் பால் தினகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைவேந்தர் பிரின்ஸ் அருள்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக மிசோராம் மாநிலத்தின் முதலமைச்சர் லால்டுகோமா கலந்துகொண்டு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.
அப்போது, கல்லூரி வாழ்க்கையை நிறைவு செய்து பட்டங்களைப் பெறும் இளைஞர்கள் தங்களது குறிக்கோளைக் கண்டுபிடிக்க முயல வேண்டும் எனக் கூறினார். உலகுக்கு அதிக எண்ணிக்கையில் பொறியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், மேலாளர்கள் தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அதே நேரத்தி்ல் கருணை, இரக்கம், ஒருமனப்பாடு கொண்டவர்கள்தான் முக்கியத் தேவையாக இருப்பதாகத் தெரிவித்தார்.
கற்ற கல்வியை நாட்டின் முன்னேற்றத்துக்கும், சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கும் பயன்படுத்த வேண்டும் என மிசோரம் முதலமைச்சர் லால்டுகோமா தெரிவித்தார்.முன்னதாக, மிசோரம் முதலமைச்சர் லால்டுகோமாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவில் பேசிய பால் தினகரன், சமுதாயத்தில் நிலவி வரும் பிரச்சனைகளுக்குத் தொழில் நுட்ப அறிவின் மூலம் தீர்வுகளைக் கண்டுபிடித்து நாட்டின் முன்னேற்றத்துக்குப் பாடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களின் சமூகப் பொறுப்பின் வெளிப்பாடாகப் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக நிதி வழங்கினர். விழாவில் பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.


