காவல் நிலைய மரணங்கள் பெருமளவில் குறைந்திருப்பதாகவும், அதே நேரத்தில் ஆங்காங்கே ஒவ்வொன்று நடப்பது வருத்தத்துக்குரியது கண்டனத்துக்குரியது என்றும் தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அடுத்த வம்பன் அருகே உள்ள தனியார் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சைலேந்திரபாபு கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது வேளாண்மைப் பட்டப்படிப்பு படித்த தான் டிஜிபியாக இருந்ததாகவும், இறையன்பு தலைமைச் செயலாளராக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
மாணவர்கள் சைலேந்திரபாபுவிடம் பல்வேறு வினாக்களை எழுப்பி அதற்கு விடையையும் பெற்றனர். இதற்குப் பிறகு கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திரபாபு, அஜித்குமார் கொலை வழக்கில் தவறு செய்த காவலர்கள் காவல் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
ஒருவரைக் கொல்லும் அளவுக்குத் தாக்கினால் தான் ஒரு நகையைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நிலை வந்தால் அந்த நகையைக் கண்டுபிடிக்க வேண்டாம் என்று தான் வெளிப்படையாகவே காவல்துறையினருக்குச் சொன்னதாகத் தெரிவித்தார்.

