அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தக்காளி ரூ.130-க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் விற்பனையாகி வந்ததால் முதற்கட்டமாக சென்னை மாநகரில் ரேஷன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பீன்ஸ், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், உருளைக் கிழங்கு போன்றவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. இஞ்சி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கிலோ ரூ.280-க்கு விற்பனைக்கு செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் இஞ்சி ரூ.190-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் சில்லரை கடையில் ரூ.280-க்கும், மொத்த காய்கறி விற்பனை கடையில் ரூ.255-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தை விலையை விட, குறைந்த விலையில் மக்களுக்கு காய்கறிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகரிக்க வேண்டும். வீடு தேடிச் சென்று காய்கறிகளை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களை தொடங்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை முதல்வர் வழங்கியுள்ளார்.