மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொண்டார். பல்வேறு அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக பயனாளிகளை தேர்ந்தெடுக்க அனைத்து ரேஷன் கடை அருகிலும் சிறப்பு முகாம் நடத்துவது, உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மகளிர் உரிமைத்தொகை திட்டம் தமிழக வரலாற்றில் மிகப் பெரிய திட்டம்.
இந்த மாபெரும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல் கூட்டம் இது. தலைமுறை தலைமுறையாக பயனளிக்கப் போகும் திட்டம் இது. சமூக நீதி என்ற கோட்பாட்டுடன் இந்த அரசு செயல்படுகிறது. பெண்களின் உழைப்பு ஆண்களின் உழைப்புக்கு நிகராகவே இருக்கிறது. செப்டம்பர் 15-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு கோடி விண்ணப்பங்களை ரேஷன் கடைகள் மூலம் விநியோகித்து திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். உரிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் இத்திட்டம் பயனாளிகளைச் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோரம் வசிப்பவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.